தமிழக செய்திகள்

குறுவை தொகுப்பு திட்டத்தில் பயன்பெற உழவன் செயலியில் விவசாயிகள் பதிவு செய்யலாம்

குறுவை தொகுப்பு திட்டத்தில் பயன்பெற உழவன் செயலியில் விவசாயிகள் பதிவு செய்யலாம் என கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

குறுவை தொகுப்பு திட்டத்தில் பயன்பெற உழவன் செயலியில் விவசாயிகள் பயன்பெறலாம் என கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குறுவை சாகுபடி

ரூ.6.38 கோடியில் நாகை மாவட்டத்துக்கு குறுவை தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. எனவே நடப்பு ஆண்டில் 50 ஆயிரம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற தற்போது குறுவை நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் உடனடியாக உழவன் செயலி மூலம் பதிவு செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மானியத்தில் ரசாயன உரங்கள்

மேலும் இந்த திட்டத்தின் மூலம் குறுவை நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் வேளாண் உற்பத்தி திறனை அதிகரித்து அதிக மகசூல் பெற்று அதிக லாபமடைய ஒரு ஏக்கருக்கு யூரியா- 45 கிலோ, டி.ஏ.பி.- 50 கிலோ மற்றும் பொட்டாஷ் -25 கிலோ உள்ளிட்ட ரசாயன உரங்கள் 100 சதவீத மானியத்தில் அந்தந்த பகுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வழங்கப்படும்.

நாகை மாவட்டத்துக்கு 25 ஆயிரம் ஏக்கருக்கு ரூ.6.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தரமான குறுகிய கால நெல் விதைகள் 50 சதவீத மானியத்தில் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் மற்றும் விதை கிராம திட்டத்தின் மூலம் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களில் வழங்கப்படும்.

பசுந்தாள் உர விதைகள்

மேலும் இந்த திட்டத்தின் மூலம் மண்வளத்தை அதிகரிக்கும் வகையில் பசுந்தாள் உர பயிர் சாகுபடி மேற்கொள்ள 50 சதவீத மானியத்தில் பசுந்தாள் உர விதைகள் வழங்கப்படும்.

இந்த திட்டத்தில் விவசாயிகள் பயன் பெற உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.