தமிழக செய்திகள்

தோட்டத்தில் புகுந்து தாக்கிய சிறுத்தையுடன் கட்டிப்புரண்டு சண்டையிட்ட விவசாயிகள்

தோட்டத்தில் புகுந்து தாக்கிய சிறுத்தையுடன் கட்டிப்புரண்டு சண்டையிட்ட விவசாயிகள் 2 பேர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினத்தந்தி

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் பாப்பாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மாறன் (வயது 62). விவசாயி. அங்குள்ள தனது சோளத்தோட்டத்தில் நேற்று காலை 7 மணியளவில் மாறன் வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது தோட்டத்தில் புகுந்து பதுங்கியிருந்த சிறுத்தை ஒன்று திடீரென மாறனின் மீது பாய்ந்து கடித்து குதறத்தொடங்கியது. இதனால் நிலைகுலைந்துபோன மாறன் அய்யோ, அம்மா என்று அலறினார். பின்னர் துணிச்சலை வரவழைத்துக்கொண்டு சிறுத்தையுடன் போராட தொடங்கினார்.

கட்டிப்புரண்டு சண்டை

மாறனின் சத்தத்தை கேட்டு பக்கத்து தோட்டத்தில் வேலை செய்துகொண்டு இருந்த விவசாயி வரதராஜ் என்பவர் அங்கு ஓடிவந்தார். சிறுத்தை மாறனை கடித்துக் கொண்டு இருப்பதை பார்த்து, மாறனை சிறுத்தையிடம் இருந்து மீட்க முயன்றார். அப்போது ஆவேசம் அடைந்த சிறுத்தை வரதராஜை நோக்கி பாய்ந்து அவரையும் தாக்கியது. ஒரு கட்டத்தில் 2 விவசாயிகளும் சேர்ந்து சிறுத்தையுடன் சோளத்தோட்டத்துக்குள் கட்டிப்புரண்டு சண்டையிட்டார்கள். அப்போது சத்தம் கேட்டு வெங்கடாசலம் என்பவர் ஓடிவந்தார். அவரையும் சிறுத்தை தாக்கியது. ஆனால் அவர் தப்பி ஓடிவிட்டார். மேலும் அவர் அக்கம் பக்கத்தில் வேலை செய்துகொண்டு இருந்தவர்களை அங்கு அழைத்துக்கொண்டு ஓடி வந்தார். சத்தம் கேட்டு அங்கு கிராம மக்கள் ஏராளமானோர் கூடினர்.

தப்பி ஓடியது

பொதுமக்கள் கூட்டத்தை பார்த்ததும் சிறுத்தை மாறனையும், வரதராஜையும் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. சிறுத்தை தாக்கியதில் மாறனுக்கும், வரதராஜனுக்கும் உடலில் பல இடங்களில் படுகாயம் ஏற்பட்டது. உடனே பொதுமக்கள் அவர்கள் இருவரையும் மீட்டு அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தார்கள். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விவசாயிகளை தாக்கிய சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை