தமிழக செய்திகள்

பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம்

பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

தினத்தந்தி

கோவை,

கோவை கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு சார்பில் நடைபெறவுள்ள தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இதற்காக ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து விமானம் மூலம் இன்று கோவை விமான நிலையத்திற்கு மோடி வருகிறார். அங்கு அவருக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்பு அளிக்கின்றனர்.

பின்னர் அவர் அங்கிருந்து கார் மூலம் மாநாடு நடைபெறும் கொடிசியா வளாகத்துக்கு மதியம் 1.30 மணிக்கு செல்கிறார். அங்கு தென்னிந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதையடுத்து பிரதமர் மோடி, இயற்கை வேளாண்மை மாநாட்டை தொடங்கி வைத்து, பி.எம். கிசான் திட்டத்தில் 21-வது தவணையாக 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி உதவித்தொகையை வழங்கி பேசுகிறார்.

மேலும் அவர், இயற்கை விவசாயத்தில் சாதனை படைத்த விவசாயிகளுக்கு விருது வழங்கி கவுரவிக்கிறார். அதன்பிறகு இயற்கை விவசாயம் செய்து வரும் விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகளுடன் அவர் கலந்துரையாடுகிறார். பிரதமர் மோடி வருகையையொட்டி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோவை வேளாண் மாநாட்டை புறக்கணித்து விவசாயிகள் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இயற்கை விவசாயத்திற்கு மானியம் இல்லை எனவும், இயற்கை வேளாண்மைக்கு முற்றிலும் எதிரான மரபணு மாற்றப்பட்ட நெல் விதைகளை இறக்குமதி செய்வதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

மேலும் கோவை வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்புத் தெரிவித்து மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம் நடத்தினர். அதில் கோவை மெட்ரோ திட்டத்தை நிராகரித்த மோடிக்கு கோவையில் என்ன வேலை என முழக்கங்களை எழுப்பினர்.