சென்னை,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
கடந்த பத்தாண்டுகளாக மாற்றுக் கருத்துகளையும், விமர்சனம் செய்யும் கருத்துரிமையினையும் சகித்துக் கொள்ள முடியாத, பாசிச வகைப்பட்ட தாக்குதலை மோடி அரசு நடத்தி வந்தது. இந்த வெறுப்பு அரசியல் தொடரக் கூடாது என்று, மக்கள் வாக்களித்ததன் மூலம் தெளிவாக எச்சரித்துள்ளனர். ஆனால், விக்கிரமாதித்தன் கதையில் வேதாளம் மீண்டும், மீண்டும் மரம் தேடி செல்வது போல், மோடி பிரதமர் பொறுப்பை ஏற்கும் முன்னதாகவே அன்னிய ஆதிக்கத்தை எதிர்த்தும், அரசியல் உரிமைக்காகவும் போராடி மறைந்த தலைவர்களை அவமதிக்கும் நடவடிக்கை தொடங்கிவிட்டது.
நாடாளுமன்ற பராமரிப்பு என்கிற பெயரால், தேச விடுதலைப் போராட்டத்தில் தலைமை வகித்த தேசப்பிதா காந்தி, அரசியல் அமைப்பு சட்டத்தை வரைவு செய்து வழங்கிய சமூக நீதி போராளி அண்ணல் அம்பேத்கர், சமய சார்பற்ற பண்பின் பிரதிநிதியாக திகழ்ந்த சத்திரபதி சிவாஜி ஆகியோரது சிலைகள் அகற்றப்பட்டு, இடம் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. நான்கு தலைமுறை தாண்டியும் தேசப்பிதா காந்தியை உலக நாடுகள் போற்றியும், வணங்கியும் வருகின்றன. இந்த நிலையில் திரைப்படம் மூலம்தான் காந்தி உலக நாடுகளுக்கு அறிமுகமானார் எனக் கூறி இழிவுபடுத்தி, மோடி கண்டனத்துக்கு ஆளானார்.
நாடு மதித்து போற்றும் தலைவர்களை அவமதிக்கும் செயலை மோடி அரசு உடனடியாக கைவிட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. அவரை ஆதரித்து நிற்போர் அவருக்கு தக்க அறிவுரை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.