தமிழக செய்திகள்

மாநில உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவதில்லை -மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்

மாநில உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவதில்லை என்று மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை ஐகோர்ட்டு 125-வது ஆண்டு விழாவுக்காக வருகை தந்திருந்த மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் நேற்று மாலை சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இதேபோல் மறைந்த முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் அண்ணாதுரை ஆகியோரின் நினைவிடங்களிலும் அவர் அஞ்சலி செலுத்தினார்.

அவருடன் பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் மற்றும் பலர் வந்திருந்தனர். அவர்களுடன் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.பி. நவநீதகிருஷ்ணன் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஞ்சலி செலுத்திய பின்னர் ரவிசங்கர் பிரசாத் நிருபர்களிடம் கூறியதாவது:-

தொலைநோக்கு பார்வை உடையவர்

இதற்கு முன் இந்த சமாதிக்கு வருவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. சென்னை ஐகோர்ட்டின் 125-வது ஆண்டு விழாவில் கலந்து கொள்ள வந்ததால், ஜெயலலிதா சமாதிக்கு வரும் வாய்ப்பு கிடைத்தது. வாஜ்பாய் அரசில் மந்திரியாக இருந்தபோதும், தமிழக பா.ஜனதா பொறுப்பாளராக இருந்தபோதும் அந்த மேன்மை மிக்க தலைவருடன் இணைந்து பணியாற்றியதில் பெருமைபடுகிறேன்.

மோடி அரசில் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகும் தமிழகத்தின் வளர்ச்சிக்காக இணைந்து பணியாற்றி இருக்கிறோம். ஜெயலலிதா ஒரு துணிவு மிக்க தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவி.

தலையிடுவதில்லை

பயங்கரவாத விவகாரத்தில் அவர் ஒரு தேசியவாதியாக செயல்பட்டார். பயங்கரவாதத்தை வேரறுப்பதில் முனைப்பாக செயல்பட்டார். அதனால்தான் அவரது சமாதிக்கு தனிப்பட்ட முறையில் வந்து அஞ்சலி செலுத்துகிறேன். அவருடன் இணைந்து பணியாற்றியது பசுமரத்து ஆணி போல் பதிந்துள்ளது. தமிழ்நாட்டுக்கு அவர் செய்த பணிகள் ஏராளம். எனவே தமிழ்நாடு செழிப்படையும், கண்டிப்பாக வளர்ச்சி அடையும்.

மத்திய அரசு எந்த மாநிலத்தின் உரிமைகளிலும் தலையிடுவதில்லை. பா.ஜனதா நாடு முழுவதும் 70 சதவீத இடங்களில் ஆட்சி செய்கிறது. எங்களுக்கு 13 முதல்-மந்திரிகள், 4 துணை முதல்-மந்திரிகள் உள்ளனர்.

மணிப்பூராக இருந்தாலும் சரி, உத்தரபிரதேசமாக இருந்தாலும் சரி எங்கு பார்த்தாலும் மக்களின் ஆதரவால் வெற்றி பெற்று வருகிறோம். பிரதமர் மோடி உலக அளவில் இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்கிறார். அதில் தமிழகமும் சேர்ந்து வளர்ச்சி அடையும்.

மரணம் அடைவதற்கான வயதல்ல

ஜெயலலிதாவின் மரணம் குறித்த நீதி விசாரணை பற்றி நான் கருத்து சொல்ல முடியாது. அது அ.தி.மு.க.வினரின் கோரிக்கை. எனினும் என்னை பொறுத்தவரையில் அவரது வயது மரணம் அடைவதற்கான வயதல்ல என்பதை மட்டும் என்னால் சொல்ல முடியும்.

நீட் தேர்வு என்பது சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுபடி நடந்துள்ளது. இன்னும் வழக்கு நிலுவையில் இருக்கிறது. நான் சட்டத்துறை மந்திரி என்பதால் இதில் கருத்து சொல்ல முடியாது.

தமிழகத்துக்கு என்று தனியாக கவர்னரை நியமிப்பதற்கான நடவடிக்கைகளில் பிரதமர் ஈடுபட்டுள்ளார். என்னை பொறுத்தவரையில் வித்யாசாகர் ராவ் தனது பணியை சிறப்பாக ஆற்றி வருகிறார் என்பது எனது கருத்து.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு