சென்னை,
இந்தியா முழுவதும் டெங்கு காய்ச்சலில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்தவகையில் குறிப்பாக டெல்லி, பஞ்சாப், தமிழகம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்பட்டது.
தமிழகத்தில் இதுவரை 3 ஆயிரம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 400-க்கும் மேற்பட்டோர் தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் எடுக்கப்பட்ட டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், பாதிப்பு பரவுவதற்கான காரணம் குறித்தும் மத்திய சுகாதார குழு ஆய்வு மேற்கொள்ள, சுகாதாரத்துறை உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் மண்டல இயக்குனர் டாக்டர் ரோஷினி தலைமையில், டாக்டர் நிர்மல் ஜோ, டாக்டர் ஜான்சன் அமலா ஜஸ்வின் ஆகிய 3 பேர் கொண்ட மத்திய சுகாதாரக் குழுவினர் நேற்று தமிழகம் வந்தனர். தொடர்ந்து ராணிப்பேட்டையில் ஆய்வும் மேற்கொண்ட மத்திய குழுவினர், பின்னர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
டெங்கு வார்டில் ஆய்வு
அப்போது தமிழகத்தில் டெங்குவை தடுக்க எடுக்கப்பட்டு உள்ள நடவடிக்கைகள் குறித்தும், டெங்கு பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க எடுக்கப்பட்ட மருத்துவக் கட்டமைப்பு போன்றவைகள் குறித்தும் கேட்டறிந்தனர். இதைத்தொடர்ந்து சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள டெங்கு வார்டில் மத்திய குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில், டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள மற்ற ஆஸ்பத்திரிகளிலும் இந்த மத்திய குழுவினர் ஆய்வு நடத்த உள்ளனர்.