காஞ்சீபுரத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மூத்த மகள் பிரியங்கா (வயது 30). எம்.இ. படித்துள்ளார். கடந்த வாரம் பிரியங்காவிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்தை திருப்பதி அல்லது திருமலையில் நடத்த பெரியோர்கள் முடிவு செய்தனர். இந்த நிலையில் திருமணத்திற்கு, திருமண மண்டபத்தை முன்பதிவு செய்வதற்காக பிரியங்கா, அவரது பெற்றோர் சொகுசு காரில் திருப்பதிக்கு சென்றனர். காரை பிரியங்காவின் தந்தை செல்வம் ஓட்டி சென்றார். நகரி வரை செல்வம் காரை ஓட்டிச் சென்றுள்ளார். அவருக்கு சோர்வு ஏற்பட்டதால் நகரியில் இருந்து பிரியங்கா காரை ஓட்டிச் சென்றார். திருப்பதி மாவட்டம் வடமாலப்பேட்டை மண்டலம் அஞ்சேரம்மன் கோவில் அருகில் சென்றபோது அங்கிருந்த வேகத்தடை அருகில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் படுகாயம் அடைந்த பிரியங்கா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய பெற்றோர் காயமின்றி உயிர்தப்பினர்.