சிவகங்கை,
சிவகங்கை ஆயுதப்படை போலீஸ் பிரிவில் 30 வயதான பெண் ஒருவர் போலீசாக வேலைபார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகிவிட்டது. இந்த நிலையில் அவருடன் ஒரு ஆண் நண்பர் பேசி வந்துள்ளார். அந்த நபர் திடீரென அந்த பெண் போலீசை தொடர்பு கொண்டு உங்களை அவசரமாக சந்திக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார்.
மேலும் சிவகங்கையில் திருப்பத்தூர் சாலை பகுதியில் உள்ள ஒரு இடத்துக்கு வருமாறு கூறி இருக்கிறார். இதை நம்பிய அந்த பெண் போலீஸ் அந்த சாலை பகுதிக்கு சென்றுள்ளார். அது ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியாக இருந்தது. பின்னர் நைசாக பேசி புதர் சூழ்ந்த ஒரு இடத்துக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு வைத்து பேசிக்கொண்டு இருந்தபோது அந்த நபர் திடீரென பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதற்கிடையே அந்த ஆண் நபர். தனது கூட்டாளிகள் 2 பேரையும் அங்கு வரவழைத்து உள்ளார். தொடர்ந்து 3 பேரும் பாலியல் தொல்லை கொடுத்ததால் பெண் போலீஸ் அலறினார். உடனே அங்கிருந்து ஓட்டம் பிடித்து அருகில் உள்ள வீட்டினரை அழைத்து உதவ கேட்டுக்கொண்டார். உடனே அந்த 3 பேரையும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மடக்க முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால், தப்பி ஓடிவிட்டனர்.
இதுதொடர்பாக போலீஸ் கட்டுப்பாடு அறை எண் 100-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பெண் போலீசை மீட்டு உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து அறிந்த சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவப்பிரசாத் தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதன்பேரில் சிவகங்கை துணை சூப்பிரண்டு அமலஅட்வின், அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி ஆகியோர் விசாரணை நடத்தினர். அதில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மானாமதுரை அருகே தூதை கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் ராபின் (வயது 28), சித்தாலங்குடி கிராமத்தை சேர்ந்த மகாராஜா (29), ஹரிஸ் (21) ஆகிய 3 பேர் என தெரியவந்தது. இதில் பெண் போலீசின் நண்பராக பழகி அவரை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு வரவழைத்தது ராபின் ஆவார். இதைதொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.