சென்னை,
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய உர அளவை கால தாமதமின்றி மத்திய அரசு வழங்க வேண்டும் என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அதில்,
கார், குறுவை, செர்ணவாரி பருவங்களில் நிகழாண்டில், 10 லட்சம் ஏக்கருக்கு மேலாக நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் யூரியா மற்றும் உரங்களின் தேவை அதிகரித்துள்ளது.
கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை தமிழகத்திற்கு 3 லட்சத்து 83 ஆயிரம் மெட்ரிக் டன் ஒதுக்கப்பட்ட நிலையில், இதுவரை 2 லட்சத்து 56 ஆயிரம் மெட்ரிக் டன் உரம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதே மாதங்களில் டிஏபி உரம் 1 லட்சத்து 20ஆயிரம் மெட்ரிக் டன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், தற்பேது வரை 87 ஆயிரம் மெட்ரிக் டன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனால் உற்பத்தி மற்றும் விவசாயிகளின் வருமானம் பெருமளவில் குறைய வாய்ப்பு உள்ளது என்றும் உரிய நேரத்தில் யூரியா மற்றும் டிஏபி உரங்களை, உர வழங்கல் திட்டத்தின்படி முழுமையாக வழங்க வேண்டும் எனவும் மேலும், இறக்குமதி செய்யப்படும் உரங்களை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள துறைமுகங்களில் வந்தடைய ஏற்பாடு செய்து தர வேண்டும் என அந்த கடிதத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.