சென்னை,
சென்னை கடற்கரையில் இருந்து திருமால்பூர் நோக்கி மின்சார விரைவு ரெயில் இன்று காலை புறப்பட்டுச் சென்றது. இதில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், பணிக்கு செல்பவர்கள் ஏராளமானோர் பயணித்தனர். இருக்க இடம் கிடைக்காமல் பலர் படிக்கட்டில் தொங்கிகொண்டு பயணம் செய்தனர்.
இந்நிலையில், பரங்கிமலை ரெயில் நிலையத்தை நெருங்கியபோது, படிக்கட்டில் தொங்கிகொண்டிருந்தவர்கள் பக்கவாட்டில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி கீழே விழுந்தனர். பலத்த காயமடைந்த அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 7 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், ரயிலில் இருந்து கீழே விழுந்ததில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். படுகாயம் அடைந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.