தமிழக செய்திகள்

நிதிநிலை அறிக்கையால் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மக்களின் அமோக ஆதரவு கிடைக்கும்: செல்வப்பெருந்தகை

தூய்மை பணியாளர்களுக்கு 30 ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்படும் என்ற அறிவிப்பு மிகுந்த வரவேற்புக்குரியது.

சென்னை,

தமிழக காங்கிரஸ் தலைவர் கு. செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., வெளியிட்டு உள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் 2026-27 ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை பல்வேறு நிதி நெருக்கடிகளுக்கிடையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சமர்ப்பித்து, பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து சாதனைகள் படைத்ததை பட்டியலிட்டிருக்கிறார்.

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை பொறுத்தவரை, ஆட்சி தொடங்கியது முதல் பல்வேறு திட்டங்களின் மூலமாக மகளிர் முன்னேற்றத்தில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறார். இதுவரை கடந்த கால ஆட்சிகளில் இத்தகைய முக்கியத்துவம் மகளிருக்கு வழங்கப்பட்டதில்லை. சமீபத்தில் யாருமே எதிர்பாராத வகையில் 1 கோடியே 31 லட்சம் மகளிருக்கு காலை 6 மணிக்கெல்லாம் வங்கி கணக்கில் 5 ஆயிரம் ரூபாய் செலுத்தி இன்ப அதிர்ச்சியை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கியிருக்கிறார். கடந்த மாதத்தில் பொங்கல் பரிசாக மகளிருக்கு 3 ஆயிரம் ரூபாயும், ஜனவரி மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை 1000 ரூபாய் சேர்த்தால் 9 ஆயிரம் வழங்கப்பட்டிருக்கிறது.

இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை ஒவ்வொரு மகளிருக்கும் ரூபாய் 39 ஆயிரம் வழங்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் மகளிரின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்பட்டு சுயசார்பு நிலையை அடைந்து சமூகத்தில் சிறப்பான முன்னேற்றத்தை பெற்றிருக்கிறார்கள். மதிய உணவு திட்டத்தின் மூலம் பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகரித்திருக்கிறது. மேலும், காலை உணவு திட்டத்தின் மூலமாக 19 லட்சத்து 34 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்திருக்கிறார்கள். இதன்மூலம் ஏழை, எளிய மாணவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான பாதை திறந்து விடப்பட்டிருக்கிறது.

தூய்மை பணியாளர்களுக்கு 30 ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்படும் என்ற அறிவிப்பு மிகுந்த வரவேற்புக்குரியது. தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. உள்ளிட்ட வகுப்புவாத சக்திகள் மதரீதியாக மக்களை அணி திரட்டுவதற்கு தமிழ்நாடு அரசின் மீது ஆதாரமற்ற அவதூறு குற்றச்சாட்டுக்களை கூறி வருவதை முறியடிக்கிற வகையில் ஆன்மீக புரட்சி நிகழ்த்தப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 1,048 கோவில்களுக்கு சொந்தமான ரூபாய் 8,363 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டிருக்கின்றன. ரூபாய் 8,100 கோடி செலவில் திருக்கோவில்களுக்கு திருப்பணிகள் நடைபெற்றுள்ளன.

இதன்மூலம் மதச்சார்பற்ற கொள்கையில் தி.மு.க. அரசுக்கு இருக்கும் கொள்கை ரீதியான பற்றை வெளிப்படுத்துவதற்கு இதைவிட வேறு சான்றுகள் தேவையில்லை. கடந்த 12 ஆண்டுகளாக மத்திய பா.ஜ.க. அரசு, தமிழ்நாட்டிற்கு உரிய நிதியை ஒதுக்காமல் புறக்கணித்து வருவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், மத்திய அரசு பொறுப்பேற்றுள்ள திட்டங்களுக்கு மாநில அரசுக்கு உரிய நிதியை விடுவிக்காமல் நிறுத்தி வைத்துள்ளது.

ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்திற்கான நிதி ஒதுக்கீட்டில் 3,548 கோடி ரூபாய், ஜல்ஜீவன் திட்டத்திற்கு 3,112 கோடி ரூபாய் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒன்றிய நிதிக்குழு பரிந்துரையின்படி விடுவிக்கப்பட வேண்டிய மானியங்கள் 2,246 கோடி ரூபாய் என மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யாமல் நிறுத்தி வைத்திருக்கிறது. மெட்ரோ ரெயில் திட்டத்தின் செலவினத்தில் 50 : 50 என மேற்கொள்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தாலும், அதன்படி மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய நிதி மறுக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்ற நோக்கத்தில், மாநில அரசின் சொந்த நிதியிலிருந்து மத்திய அரசின் பங்கான ரூபாய் 9,500 கோடியை மாநில அரசின் மொத்த நிலுவை கடன்களில் ஒரு பகுதியாக தொடர்ந்து வருகிறது. இதன்மூலம் மாநில அரசின் நிதி ஆதாரம் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகி வருகிறது. மத்திய பா.ஜ.க. அரசு நிதி ஒதுக்கீட்டில் அப்பட்டமான பாரபட்ச நடைமுறையை தொடர்ந்து கையாண்டு வருகிற நிலையில், தமிழ்நாடு அரசு தனது நிதி ஆதாரங்களை பெருக்கி இதன்மூலமாக இந்தியாவிலேயே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது.

பொருளாதார வளர்ச்சியில் மராட்டிய மாநிலத்திற்கு அடுத்த நிலையில் தமிழ்நாடு இருந்து வருகிறது. தமிழ்நாட்டு மக்களின் தனிநபர் வருமானம் ரூபாய் 3.62 லட்சம். ஆனால், தேசிய சராசரி தனிநபர் வருமானம் 1.96 லட்சம் தான். தமிழ்நாட்டின் கடன் சுமையை பற்றி பா.ஜ.க.வினர் விமர்சனம் செய்து வருகிறார்கள். ஆனால், மத்திய பா.ஜ.க. அரசின் கடன் கடந்த 11 ஆண்டுகளில் 200 லட்சம் கோடி ரூபாயை தாண்டி வருகிறது. மத்திய அரசின் வருமானத்தில் 1 ரூபாயில் 25 பைசா வட்டிக்காக செலவிடப்படுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடன் 58 சதவீதமாக உள்ளது.

இதில் தனிநபர் சராசரி கடன் ரூபாய் 1.14 லட்சம். இந்நிலையில், மத்திய அரசு நாட்டையே திவாலான நிலையில் அழைத்து சென்று கொண்டிருக்கும்போது, தமிழ்நாட்டின் கடன் சுமையை பற்றி பேசுவதற்கு பா.ஜ.க.வினருக்கு எந்த உரிமையும் இல்லை. எனவே, தமிழ்நாட்டு நலன் சார்ந்த பட்ஜெட்டை சமர்ப்பித்த நிதியமைச்சரையும், தமிழ்நாடு முதல்-அமைச்சரையும் மனதார பாராட்டுகிறேன். பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மூலம் மக்களின் மனதை கவர்ந்திருக்கிற முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மேலும் தமிழ்நாட்டு மக்களின் அமோக ஆதரவு பெறுவதை இந்த நிதிநிலை அறிக்கை உறுதி செய்திருக்கிறது என தெரிவித்து உள்ளார்.