

சென்னை,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை செயலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு அணுகல் தன்மையுடன் கூடிய ஒருங்கிணைந்த சேவைகளை வழங்கிடும் வகையில் 14 கோடியே 57 லட்சம் ரூபாய் செலவில் சென்னை உட்பட 20 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 105 விழுதுகள் – ஒருங்கிணைந்த சேவை மையங்களை திறந்து வைத்தார்.
இதில் வருவாய் கோட்ட அளவில் 17 மையங்களும், வட்டார அளவில் 88 மையங்களும் அடங்கும். தமிழ்நாடு அரசு, உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தி வரும் “மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைத்திட்டம்” (TN-RIGHTS Project) மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து வகையான மறுவாழ்வு சேவைகளை, அவர்களின் தேவைகளுக்கேற்ப இல்லங்களிலும் மற்றும் ஒருங்கிணைந்த சேவை மையங்களிலும் வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.
TN-RIGHTS திட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் திட்ட மதிப்பீட்டு ஆவணத்தின்படி (Project Appraisal Document - PAD) மொத்தம் 94 வருவாய் கோட்ட அளவிலான (Sub-Divisional) ஒருங்கிணைந்த சேவை மையங்களும், 568 வட்டார (Block-level) ஒருங்கிணைந்த சேவை மையங்களும் படிப்படியாக (phased manner) செயல்படுத்தப்பட வேண்டும்.
அதன் முதல்கட்டமாக, சென்னை, கடலூர், தென்காசி, தருமபுரி, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை ஆகிய 7 மாவட்டங்களில் 15 வருவாய் கோட்ட அளவிலான ஒருங்கிணைந்த சேவை மையங்கள் மற்றும் 66 வட்டார ஒருங்கிணைந்த சேவை மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. தற்போது கூடுதலாக சென்னை, அரியலூர், கோயம்புத்தூர், கடலூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவள்ளூர், தூத்துக்குடி, விருதுநகர், விழுப்புரம், நீலகிரி, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 20 மாவட்டங்களில் 105 “விழுதுகள் - ஒருங்கிணைந்த சேவை மையங்கள்” 14 கோடியே 57 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு தமிழ்நாடு முதல்-அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.
இதில் வருவாய் கோட்ட அளவில் 17 மையங்களும், வட்டார அளவில் 88 மையங்களும் அடங்கும். இதன்மூலம் மாநிலம் முழுவதும் மொத்தம் 32 வருவாய் கோட்ட அளவிலான ஒருங்கிணைந்த சேவை மையங்களும், 154 வட்டார ஒருங்கிணைந்த சேவை மையங்களும் செயல்பாட்டில் இருக்கும். வருவாய் கோட்ட அளவிலான மையங்களில் வழங்கப்படும் சேவைகள் மாற்றுத்திறனாளிகளின் நாள்பட்ட மறுவாழ்வு தேவைகளை பூர்த்தி செய்ய, ஒரே இடத்தில் சிறப்பு கல்வி, கண்பார்வை அளவியல் சேவை, கேட்டல் மற்றும் பேச்சு பயிற்சி, இயன்முறை சிகிச்சை, செயல்முறை சிகிச்சை, உளவியல் சிகிச்சை ஆகிய ஆறு சேவைகள் வழங்கப்படுகின்றன.
இச்சேவைகளை வழங்க தகுதியான வல்லுநர்கள் நியமிக்கப்பட்டு, தேவையான சிகிச்சை உபகரணங்களும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. வட்டார அளவிலான மையங்களில் வழங்கப்படும் சேவைகள் வட்டார மையங்களில் சிறப்பு கல்வி (தகவல் தொடர்பு பிரச்சனைகள் மற்றும் அறிவாற்றல் பிரச்சனைகள்), இயன்முறை சிகிச்சை, உளவியல் ஆலோசனை ஆகிய சேவைகள் வழங்கப்படும். இச்சேவைகள் சமூக சேவை வழங்குநர்கள் (CSP) மூலம் நியமிக்கப்பட்ட வல்லுநர்களால் வழங்கப்படும். இவ்வல்லுநர்கள், மையங்களில் சேவைகளை வழங்குவதுடன், தேவையெனில் மாற்றுத்திறனாளிகள் இல்லங்களுக்கே சென்று சேவைகளை வழங்குவார்கள்.