நெல்லை,
இதுதொடர்பாக சென்னை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர் கா.ஜெகதீசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பட்டாசு உற்பத்தியில் முதன்மை வகிக்கும் தமிழகத்தில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் தான் இந்தியா முழுவதும் அனுப்பப்படுகின்றன. அந்த வகையில் வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிக அளவு பட்டாசு உற்பத்தி செய்ய வேண்டிய நிலை உள்ளதால் பாதுகாப்பாக உற்பத்தி பணியினை மேற்கொண்டு, தீபாவளியை விபத்தில்லா பண்டிகையாக கொண்டாட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
ஆகவே, பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள் அனைவரும் உரிமத்தில் எந்த வகையான பட்டாசுகள் தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதோ அத்தகைய பட்டாசுகளை மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும். பட்டாசு உற்பத்திக்கு தேவைப்படும் மருந்து கலவைகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும். மீதமுள்ள மருந்து கலவையினை பாதுகாப்பாக அகற்ற வேண்டும்.
ஒரு அறையில் அனுமதிக்கப்பட்ட நபர்களை கொண்டு உற்பத்தி மேற்கொள்ளப்பட வேண்டும். மருந்து கலவையினை தயாரித்த உடனே செலுத்துதல் பணி மேற்கொள்ளப்பட வேண்டும். இதன்மூலம் மருத்து கலவை நீர்த்துபோய் விபத்து நிகழ்வது தவிர்க்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பட்டாசு உற்பத்திக்கு ஒரு நாள் தேவைக்கு மட்டும ரசாயன கலவையினை பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இரும்பிலான பொருட்களை உற்பத்தியில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகளை அதற்கென உள்ள உலர் மேடையில் காய வைக்கப்பட வேண்டும். மரத்தடியில் அமர்ந்து உற்பத்தி பணி செய்வதை தவிர்க்க வேண்டும். இரவு நேரங்களில் பட்டாசுகளை தொழிற்சாலையில் உற்பத்தி செய்யக்கூடாது. சரக்கு வாகனங்களை பணி அறைகளுக்கு கொண்டு செல்லக்கூடாது. கழிவு பட்டாசுகளை அன்றைய தினமே அகற்றி உரிய முறையில் எரிகுழியில் தக்க மேற்பார்வையுடன் எரிக்க வேண்டும். மேலும் அலுவலக வளாகத்தில் மேகசின் பிரிவில் கிப்ட் பாக்கெட் போடும் பணியை செய்யக்கூடாது.
தொழிற்சாலைக்கு தொழிலாளர்கள் கைபேசிகள் எடுத்துச் செல்லக்கூடாது. மது அருந்திய தொழிலாளர்களை தொழிற்சாலக்குள் அனுமதிக்க கூடாது. பருத்தி இழையிலான ஆடைகளையே தொழிலாளர்கள் அணிய வேண்டும். எனவே, பட்டாசு தொழிற்சாலை நிர்வாகத்தினரும், தொழிலாளர்களும் பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றி விபத்தில்லா பண்டிகை கொண்டாட ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.