தூத்துக்குடி,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 100வது நாள் நடந்த ஆட்சியர் அலுவலகம் நோக்கிய பொதுமக்களின் பேரணியில் வன்முறை வெடித்தது. தொடர்ந்து கலகக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தில் பதற்றத்தினை தணிக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்பின் இயல்பு நிலை திரும்பியதனை அடுத்து 144 தடை உத்தரவு முடிவுக்கு வந்தது.
அதன்பின்னர், துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை அமைச்சர் கடம்பூர் ராஜு சந்தித்து ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேரில் சென்று அவர்களின் உடல்நலம் பற்றி கேட்டறிந்து ஆறுதல் கூறினார்.
இந்த நிலையில், துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக நடிகர் ரஜினிகாந்த் நாளை தூத்துக்குடிக்கு செல்கிறார்.
அவர் நாளை காலை 8 மணிக்கு சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து புறப்பட்டு விமானத்தில் தூத்துக்குடிக்கு செல்கிறார். அரசியல் பிரவேச அறிவிப்பிற்கு பின் முதன்முறையாக அவர் பொதுமக்கள் தொடர்புடைய விவகாரத்தில் களம் இறங்குகிறார்.