புதுச்சேரி
கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை முதல்-அமைச்சர் ரங்கசாமி இன்று சந்தித்து பேசினார். அப்போது மழைநிவாரணம் வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
கனமழை
புதுவையில் பெய்த கனமழை காரணமாக பலத்த தேசம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. சங்கராபரணி, தென்பெண்ணையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மழையினால் பாதிக்கப்பட்டுள்ள கட்டுமான, அமைப்புசாரா தொழிலாளர்கள், மீனவர்கள், சிவப்பு ரேஷன்கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டும் முதல்-அமைச்சர் ரங்கசாமி நிவாரணம் அறிவித்துள்ளார். மஞ்சள் ரேஷன்கார்டுதார்களுக்கு நிவாரணம் அறிவிக்காதது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய குழு வருகை
இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களும் எழுந்துள்ளன. பொருட்சேதம் ஏற்பட்டுள்ள நடுத்தர மக்களை யார் கவனிப்பது? என்கிற ரீதியில் எழுந்துள்ள இந்த விமர்சனங்களால் அரசுக்கு கடுமையான நெருக்கடி எழுந்துள்ளது.
இந்தநிலையில் புதுவை மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களை பார்வையிட மத்தியக் குழு திங்கட்கிழமை வர உள்ளது. இதையொட்டி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை கவர்னர் மாளிகையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி திடீரென சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடம் நீடித்தது.
இதுகுறித்து கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நிவாரண பணிகள்
கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை முதல்-அமைச்சர் ரங்கசாமி கவர்னர் மாளிகையில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது அண்மையில் பெய்த கனமழை காரணமாக புதுச்சேரியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், இதுகுறித்து அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் நிவாரண பணிகள், உதவிகள், மழை வெள்ள பாதிப்புகளை மதிப்பிட மத்திய அரசு குழுவின் வருகை ஆகியவை குறித்து விவாதித்தனர்.
மேலும் கடலோர கிராமங்களில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை தடுப்பதற்கு மத்திய அரசின் உதவியோடு தடுப்பச்சுவர் எழுப்புவது பற்றியும் ஆலோசனை நடத்தினார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.