சென்னை,
சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய கரும்புக்கான நிலுவை தொகை ரூ.1,586 கோடியை பெற்றுத்தர வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதல்-அமைச்சர் வீட்டை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டம் நடத்துவதற்காக சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நேற்று காலை கூடினர்.
இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பெ.சண்முகம் தலைமை தாங்கினார். மாநில தலைவர் கே.பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் கரும்பு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த டி.ரவீந்திரன், என்.பழனிசாமி, எம்.சின்னப்பா உள்பட 500 பேர் சேப்பாக்கத்தில் இருந்து முதல்-அமைச்சர் வீட்டை நோக்கி செல்ல முயற்சித்தனர். அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச்சென்றனர். இதுகுறித்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் டி.ரவீந்திரன் கூறியதாவது.
தனியார் சர்க்கரை ஆலைகள் தரவேண்டிய 4 ஆண்டுகால நிலுவை தொகையான (மாநில அரசின் பரிந்துரை விலை) ரூ.1,350 கோடி, கூட்டுறவு மற்றும் பொதுத்துறை ஆலைகள் தரவேண்டிய கரும்பு பண பாக்கி ரூ.236 கோடி என மொத்தம் ரூ.1,586 கோடியை உடனடியாக வழங்க வேண்டும்.
கூட்டுறவு மற்றும் பொதுத்துறை ஆலைகளின் கடன்சுமை சுமார் ரூ.2,500 கோடியை மாநில அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். 2017-2018-ம் பருவத்துக்கான கரும்பு விலையை டன்னுக்கு ரூ.4 ஆயிரமாக மத்திய-மாநில அரசுகள் அறிவித்து வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.