தமிழக செய்திகள்

அரசு மானியத்துடன் மீன் வளர்ப்பு திட்டம் - அமைச்சர் டி.ஜெயக்குமார் தகவல்

அரசு மானியத்துடன் மீன் வளர்ப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு, மீன்வளத் துறையின் மூலம் உள்நாட்டு நீர்நிலைகளில் மிதவைக் கூண்டுகளில் மீன் வளர்த்தல், மீன்விதை வங்கிகள் உருவாக்குதல், பாசனக் குளங்களில் தீவிர மீன் வளர்ப்பினை மேற்கொள்ளுதல், பண்ணைக் குட்டைகளில் மீன் வளர்ப்பு ஆகிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. மீன் வளர்ப்போர் மற்றும் மீன் வளர்ப்பு சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு பல்வேறு மானிய உதவிகளையும் தமிழ்நாடு அரசு வழங்கி வருகின்றது.

தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம், 2020-2021-ன் கீழ் ரூ.5.21 கோடி மதிப்பில் நீர்ப்பாசன குளங்களில் மிதவை கூண்டுகளில் மீன் வளர்த்தல், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறைக்கு சொந்தமான குளங்களில் மீன் விரலிகள் இருப்பு செய்தல் மற்றும் மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை உறுப்பினர்களுக்கு உள்ளட்டு மானியம் வழங்குதல் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டம், 2020-2021-ன் கீழ் ரூ.12.42 கோடி மதிப்பில் பாசனக் குளங்களில் மீன் விரலிகள் இருப்பு செய்தல், பண்ணைக் குட்டைகளில் மீன் வளர்ப்பு, மிதவைக் கூண்டுகளில் மீன் வளர்த்தல், மீன் வளர்ப்புப் பண்ணை அமைத்தல், நவீன மீன் விற்பனை அங்காடி அமைத்தல் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மத்திய அரசு, பிரதம மந்திரி மத்சிய சம்பட யோஜனா, 2020-2021 திட்டத்தின் கீழ் உள்நாட்டு மீனவர்களுக்கு புதிய மீன் வளர்ப்புப் பண்ணை அமைத்தல், மீன்குஞ்சு பொரிப்பகங்கள் அமைத்தல், மீன் குஞ்சு வளர்த்தெடுக்கும் பண்ணைகள் அமைத்தல், உள்ளட்டு மானியம், மீன் விதைப் பண்ணை அமைத்தல், நீரினை மறுசுழற்சி முறையில் மீன் வளர்ப்பு மற்றும் உயிர் கூழ்மம் முறையில் மீன் வளர்ப்பு ஆகிய தொழில்நுட்பத்துடன் அதிக வருமானம் ஈட்டக்கூடிய மீன் வளத் திட்டங்களை அறிவித்துள்ளது.

இத்திட்டங்களின் கீழ் மீன் வளர்ப்பு மேற்கொள்ள பொதுப்பிரிவினருக்கு 40 சதவீதம் மற்றும் மகளிர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவினருக்கு 60 சதவீதம் மானியம் வழங்கப்படும். இத்திட்டங்களில் சேர விரும்பும் மீன் வளர்ப்போர், அந்தந்த மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்