சிங்கம்புணரி
சிங்கம்புணரி அருகே தூதுவன் கண்மாயில் மீன் பிடித் திருவிழா நடைபெற்றது.
தூதுவன் கண்மாய்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விவசாய நிலங்கள் அதிகம். குறிப்பாக மழை நீரை நம்பி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் உள்ள கண்மாய்களில் உள்ள தண்ணீர் பல ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பயன்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் சிங்கம்புணரி பருவப்பட்டி சாலையில் அமைந்துள்ள தூதுவன் கண்மாய் சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் இந்த கண்மாய் நீரை பயன்படுத்தி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த பகுதியில் விவசாயப் பணிகள் முடிவுற்று அறுவடைகள் நடைபெற்ற நிலையில் கண்மாயில் உள்ள தண்ணீர் வற்றியது. கிராமத்தார்கள் ஒன்றிணைந்து மீன்பிடித் திருவிழா தூதுவன் கண்மாயில் நடத்த முடிவு செய்து அறிவித்தனர். நேற்று காலை தூதுவன் கண்மாய் பாசன வசதி பெறும் பகுதியை சேர்ந்த முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் ஒன்றிணைந்து கண்மாய் கரையில் நின்று பச்சைக் கொடி காட்டினர். கண்மாய் கரையை சுற்றி 500-க்கும் மேற்பட்ட மீன்பிடியாளர்கள் நின்று கொண்டிருந்தனர்.
மீன்கள்
பச்சைக்கொடி காட்டியவுடன் கண்மாய்க்குள் சென்று மீன்களை பிடிக்க தொடங்கினர். சிங்கம்புணரி, கண்ணமங்கலபட்டி, நாட்டார்மங்கலம், சுக்காம்பட்டி, வகுத்தெழுவன்பட்டி, பருவப்பட்டி, குமாரிபட்டி, அரசினம்பட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கண்மாயில் இறங்கி கச்சா, தூரி, ஊத்தா வலைகளை வீசி மீன்பிடித்தனர். இதில் கட்லா, லோகு, சிசி, ஜிலேபி, கெளுத்தி, அயிரை உள்ளிட்ட மீன் வகைகள் வலையில் சிக்கின. இது போன்ற மீன்பிடித் திருவிழா நடத்தப்படுவதால் வருங்காலங்களில் விவசாயத்திற்கு குடிநீருக்கும் தேவையான மழை பெய்து விவசாயம் பெருகும் என்பது விவசாயிகளின் நம்பிக்கை.
எஸ்.புதூர்
எஸ்.புதூர் அருகே காத்தான் ஊருணியில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் ஊருணி வளர்ச்சி பணிக்காக ரூ.300 பெறப்பட்டு ஊத்தா குத்து மூலமாக மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கட்லா, ஜிலேபி, விரால், கெண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை பிடித்து சென்றனர்.