தமிழக செய்திகள்

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

கொள்ளிடம் ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் 25 ஆயிரம் மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள், ரப்பர் படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அங்கிருந்து திறக்கப்படும் உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டு திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையை அடைந்தது. அங்கிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணையை அடைந்தது. கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இந்த தண்ணீர் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் வழியாக சென்று பழையாறு அருகே கடலில் கலந்து வருகிறது. நேற்று அணைக்கரையில் இருந்து ஒரு லட்சத்து 85 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதாக தெரிகிறது.

வெள்ள அபாய எச்சரிக்கை

இதனால்,கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக கரையோர பகுதிகளான நாதல்படுகை, முதலைமேடு திட்டு, அளக்குடி ஆகிய படுகை பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஒலிபெருக்கி மூலமாகவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் கரைகளை பலப்படுத்த 25 ஆயிரம் மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல மீட்பு பணிகளுக்காக ரப்பர் படகுகளுடன் மீட்பு படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

கலெக்டர் ஆய்வு

இந்தநிலையில் வெள்ளத்தடுப்பு முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் லலிதா நேற்று ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரையோர கிராமங்களான நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளைமணல், கோரை திட்டு கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் 7 இடங்களில் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஆற்றின் கரையோரம் தற்காலிக முகாம்களும் அமைக்கப்பட்டு வருகிறது. கொள்ளிடம் ஆற்றின் கரையை பலப்படுத்தும் பணிக்காக 25 ஆயிரம் மணல் மூட்டைகள், 20 ஆயிரம் சவுக்கு கட்டைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மீட்பு பணிக்காக தீயணைப்பு துறையினர் மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர், படகுகளுடன் தயார் நிலையில் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகாரிகள்

இந்த ஆய்வின்போது சீர்காழி உதவி கலெக்டர் அர்ச்சனா, மயிலாடுதுறை கீழ காவேரி வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் சண்முகம், கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ், சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரெஜினா ராணி, அருள்மொழி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி பொறியாளர் சிவசங்கரன் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.