ஆடிப்பெருக்கை முன்னிட்டு சேலத்தில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. குண்டுமல்லி கிலோ ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.
பூக்கள் விலை உயர்வு
சேலம் பழைய பஸ் நிலையம் பகுதியில் வ.உ.சி. பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டுக்கு ஓமலூர், காடையாம்பட்டி, வீராணம், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து குண்டுமல்லி, சன்னமல்லி, சாமந்தி, அரளி உள்ளிட்ட பல பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
சுபமுகூர்த்தம் மற்றும் பண்டிகை நாட்களில் பூக்களின் விலை அதிகரிப்பது வழக்கம். இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) ஆடிப்பெருக்கை முன்னிட்டு நேற்று பூக்களின் விலை உயர்ந்து விற்பனையானது. இருந்தாலும் மார்க்கெட்டில் பூ வாங்குவதற்காக ஏராளமானவர்கள் வந்தனர். இதனால் கூட்டம் அதிகமாக இருந்தது.
குண்டு மல்லி
கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் நேற்று சில பூக்களின் விலை இருமடங்காக உயர்ந்தது. கடந்த வாரம் கிலோ ரூ.500-க்கு விற்ற குண்டுமல்லி ரூ.1,000-க்கு விற்பனையானது. இதேபோல் கடந்த வாரம் கிலோ ரூ.400 வரை விற்ற சன்னமல்லி ரூ.750-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சம்பங்கி கிலோ ரூ.200-க்கும், ஜாதிமல்லி ரூ.400-க்கும், காக்கட்டான் 360-க்கும், கலர் காக்கட்டான் ரூ.320-க்கும், அரளி, வெள்ளை அரளி, மஞ்சள் அரளி ஆகியவை தலா ரூ.180-க்கும், நந்தியாவட்டம் ரூ.200-க்கும் விற்பனையானது.