புதுடெல்லி
2018-2019-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதி மந்திரி அருண்ஜெட்லி நேற்று காலை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில்
தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் என்ற ஏழைகளுக்கான புதிய மருத்துவ உதவி திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டத்தின் கீழ், மருத்துவ சிகிச்சை பெறும் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.5 லட்சம் வரையிலான செலவு தொகை வழங்கப்படும் என்றும், இந்த திட்டத்தின் கீழ் நாட்டில் 10 கோடி ஏழை குடும்பங்கள் பயன்பெறும் என்றும், உலகில் அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் மிகப்பெரிய சுகாதார திட்டம் இதுதான் என்றும் அப்போது அவர் கூறினார்.
இந்த சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சுமார் 50 கோடி பேர் பயன் அடைவார்கள் என்று கூறிய அவர், இந்த திட்டத்தினால் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் தெரிவித்தார்.
நேற்று இது குறித்து கூறிய முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு மத்திய அரசு எந்த நிதியும் ஒதுக்கவில்லை என கூறினார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-
புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு மத்திய அரசு எந்த நிதியும் ஒதுக்கவில்லை என்பதை நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஏற்றுக்கொண்டுள்ளார். பணம் இல்லாமல் திட்டம் அறிவிப்பது நூல் இல்லாமல் பட்டம் பறக்கவிடுவது போன்றது. ஆனால் இது பட்டமும் கிடையாது மற்றும் பறக்கவும் செய்யாது.
என கூறி உள்ளார்.