சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் சிறப்பு கட்டுப்பாட்டு அறையை பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவருடன் இணை கமிஷனர் ஆல்பி ஜான் வர்கீஷ், மாநகர நல அதிகாரி டாக்டர் எம்.ஜெகதீசன், மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் எம்.எஸ்.ஹேமலதா ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் கமிஷனர் கோ.பிரகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு மனநல ஆலோசனை வழங்கும் வகையில் 100 இணைப்புகளை கொண்ட கட்டுப்பாட்டு மையம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகள் மனநல ஆலோசனை பெற 044-46122300, 044-25384520 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். கடந்த முறை மனநல ஆலோசனை கட்டுப்பாட்டு மையத்துக்கு 4 லட்சம் அழைப்புகள் வந்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மீண்டும் இந்த ஆலோசனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாட்டு மையத்தில் 24 மணி நேரமும் தடுப்பூசி குறித்தான சந்தேகங்கள், கொரோனா குறித்தான அடிப்படை சந்தேகம் குறித்து மக்கள் கேட்டறியலாம். வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டவர்களுக்கு தினமும் சுழற்சி முறையில் தொடர்பு கொண்டு ஆலோசனை வழங்கி கண்காணிக்கப்படுவார்கள். பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கான ஏற்பாடுதான் இந்த கட்டுப்பாடு அறை மற்றும் ஆலோசனை மையம். எனவே பொதுமக்கள் நல்ல முறையில் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ள வேண்டும், பிராங்க் அழைப்புகளை மேற்கொள்ளக்கூடாது.
நடிகர் விவேக் ஒரு சிறந்த மனிதர். அவரது இறப்பு மிகப்பெரிய துரதிர்ஷ்டவசமான நிகழ்வு. அவர் இறப்பு குறித்து அவதூறு பரப்பாமல் இருப்பதே அவருக்கு நாம் மனதார செலுத்தும் அஞ்சலி. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தடுப்பூசி குறித்தான அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். தடுப்பூசி தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் பேசியுள்ளார். அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னைக்கு உட்பட்ட பகுதியில் யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் கட்டுப்பாடு வர உள்ளது. அது குறித்தான அறிவிப்பு இரு தினங்களில் வெளியாகும். சென்னையில் தினமும் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உள்ளோம். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 12 ஆயிரத்து 600 படுக்கைகள் கொண்ட கொரோனா மையங்கள் தயார் நிலையில் உள்ளது. அதில் இதுவரை 1,104 படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளது.
சென்னையில் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை. தற்போது 3 லட்சம் தடுப்பூசி கையிருப்பு உள்ளது. தற்போது வரை 13 லட்சம் மக்களுக்கு தடுப்பூசி போட்டுள்ளோம். ஜூலை மாத இறுதிக்குள் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி முழுமையாக போட்டு முடிக்க திட்டமிட்டுள்ளோம். பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 475 தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதியாக உள்ளது. இதில் 363 தெருக்களில் 6 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். 108 தெருக்களில் 10 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.