சென்னை,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 7-ந் தேதி தொடங்கியது. மஸ்கட்டில் இருந்து வந்த நபரால் முதல் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியது. இதையடுத்து தமிழக அரசு சார்பில் கல்லூரி விடுதிகள், அரசு கட்டிடங்கள் உள்ளிட்டவைகளை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தயார் செய்தது.
இந்த நிலையில் தெற்கு ரெயில்வே சார்பில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 573 பெட்டிகளை கொரோனா வார்டுகளாக மாற்றம் செய்தது. தமிழக அரசு தயார் நிலையில் வைத்திருந்த படுக்கைகள் போதுமானதாக இருந்ததாலும், ஊரடங்கு உள்ளிட்ட வழிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதாலும் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் குறைந்தது. இதனால் இந்த ரெயில் பெட்டி கொரோனா வார்டுகள் பயன்படுத்தாமலேயே விடப்பட்டன.
இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தப்பட்டு ரெயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து மீண்டும் இயக்கப்பட்டது. இதையடுத்து 573 பெட்டிகளில் 73 பெட்டிகளை மீண்டும் ரெயில் போக்குவரத்துக்கு தெற்கு ரெயில்வே பயன்படுத்தியது. மீதம் இருந்த கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்ட 500 ரெயில் பெட்டிகள் அந்தந்த இடங்களில் அப்படியே வைக்கப்பட்டிருந்தன. அந்த வகையில் சென்னை பேசின் பிரிட்ஜ் ரெயில் பணிமனையில் 59 பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் 1,069 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இதுகுறித்து தெற்கு ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில் தற்போது 500 ரெயில் பெட்டிகள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டுகளாக மாற்றப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இதுவரை ஒரு நோயாளிகள் கூட அனுமதிக்கப்படவில்லை. தமிழக அரசு கேட்டுக்கொண்டால் கொரோனா நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கையை தெற்கு ரெயில்வே எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.