சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும் 90 ஆயிரம் பணியாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்றும், 4 மாதங்களுக்கான நிவாரணத் தொகை ரூ.10 ஆயிரம் உடனடியாக வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
மேலோட்டமாக பார்ப்பதற்கு வரவேற்கத்தக்க நடவடிக்கையாகத் தோன்றினாலும் இது மின்வாரிய தொழிலாளர்களுக்கு வழங்கப்படவேண்டிய ஊதிய உயர்வை சில ஆண்டுகளுக்கு தாமதப்படுத்தும் முயற்சியாகும். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
அரசு நடவடிக்கை
மின்வாரிய ஊழியர்களுக்கு, 2.57 காரணி மடங்கு ஊதிய உயர்வு வழங்குவது தான் இயற்கை நீதி ஆகும். இதுதொடர்பாக, மீண்டும் மீண்டும் பேச்சு நடத்தவேண்டிய தேவையில்லை. வரும் 12-ந்தேதிக்குள் புதிய ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்யாவிட்டால், 16-ந்தேதி ஒருநாள் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்போவதாகவும், அதை காலவரையற்ற போராட்டமாக மாற்றப்போவதாகவும் மின்வாரிய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
மின்வாரியத் தொழிலாளர்களை போராட்டம் நடத்தும் நிலைக்குத் தள்ளக்கூடாது. ஏற்கனவே அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி, மின்சார வாரியத் தொழிலாளர்களுக்கு 2.57 காரணி மடங்கு ஊதிய உயர்வு வழங்கி, புதிய ஊதிய ஒப்பந்தத்தை வரும் 12-ந்தேதிக்குள் கையெழுத்திட தமிழக அரசும், மின்சார வாரியமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.