கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் புயல், வெள்ள பாதிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். சாலியன்தோப்பி கிராமத்தில் வயலில் மூழ்கி சேதமடைந்த நெற்பயிர்களை பார்வையிட்டு சேத விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் தங்கமணி, சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத் ஆகியோரும் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, வல்லம்படுகை கிராமத்தில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் பழனிசாமி நிவாரண உதவிகளை வழங்கினார்.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் வட்டம், லால்பேட்டை பகுதியில் வீராணம் ஏரியிலிருந்து உபரிநீர் வெள்ளியங்கால் ஓடை வழியாக வெளியேற்றப்படுவதை நேரில் பார்வையிட்ட்டார்.
கடலூர் மாவட்டத்தில் புயல் மற்றும் கனமழையினால் நிரம்பியுள்ள வீராணம் ஏரியை இன்று இராதாமதகு பகுதியிலிருந்து பார்வையிட்டார்.
ஆய்வுக்கு பின் பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி கூறியதாவது:-
கனமழையால் நெல் உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டது
கனமழையால் கடலூரில் உள்ள பல ஏரிகளும், குளங்களும் நிரம்பி உள்ளன.
நிரம்பிய ஏரிகள் மற்றும் குளங்களை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்ட உள்ள நிலையில் அதனை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். தாழ்வான பகுதிகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. வல்லம்படுகை கிராமத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. வெள்ளநீர் வடிவதற்காக ரூ.400 கோடி மதிப்பிலான திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
புயல், மழையால் ஏற்பட்டுள்ள சேதங்களை கணக்கிட்டு அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கனமழையால் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படும். வாழை, கடலை, மிளகாய் உள்ளிட்ட என பல்வேறு பயிர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளளன. அவற்றை கணக்கிட்டு அரசுக்கு அறிக்கை கிடைத்தவுடன் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு உரிய இழப்பீட்டு தொகை வழங்கும் என கூறினார்.