சென்னை,
தமிழ்நாடு சீருடையாளர் பணியாளர் தேர்வாணையம் சார்பில் தமிழக போலீஸ் துறையில் 202 கைரேகை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்டது. இதில் 40 பதவிகள் போலீசில் பணியாற்றுபவர்களுக்கு ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கைரேகை சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான எழுத்து தேர்வு கடந்த டிசம்பர் மாதம் 22 மற்றும் 23-ந் தேதிகளில் நடந்தது.
எழுத்து தேர்வு முடிவு கடந்த மாதம் 5-ந்தேதி வெளியாகியது. இதில் பொது ஒதுக்கீட்டில் 525 பேரும், போலீஸ் துறையில் பணியாற்றி வரும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் தேர்ச்சி பெற்றிருந்தனர். அவர்களுக்கு ஜனவரி 20-ந்தேதி உயரம் சரிபார்க்கப்பட்டது. போலீசில் பணியாற்றி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜனவரி 21-ந்தேதி முதல் கடந்த 9-ந்தேதி வரையிலும், பொது ஒதுக்கீட்டில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரையிலும் நேர்முகத்தேர்வு நடந்தது.
கைரேகை சப்-இன்ஸ்பெக்டர் பதவிகளுக்கான நேர்முகத்தேர்வை வெற்றி கரமாக எதிர்கொள்வது எப்படி? என்பது குறித்து மனிதநேய அறக்கட்டளையால் சென்னையில் நடத்தப்பட்டு வரும் சைதை துரைசாமியின் மனிதநேய கட்டணமில்லா கல்வியகத்தால் சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு, பயிற்சி இயக்குனர் மா.கார்த்திகேயன் மேற்பார்வையில் தீவிர பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்தநிலையில் நேர்முகத்தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்றவர்களில் பொது ஒதுக்கீட்டில் 28 ஆண்களும், 7 பெண்களும், போலீஸ் துறையில் பணியாற்றி வருபவர்களில் 4 பெண்களும் என மொத்தம் 39 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேற்கண்ட தகவல் மனிதநேய அறக்கட்டளையின் நிறுவன தலைவர் சைதை துரைசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.