சென்னை,
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து அவற்றில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வருகிறது. அந்தவகையில் நடப்பாண்டு புதிதாக எடை குறைந்த செயற்கைகோள்களை விண்ணுக்கு செலுத்துவதற்காக எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகின்றனர். இந்த எடை குறைந்த ராக்கெட் இந்த ஆண்டே விண்ணுக்கு செயற்கைகோள்களை சுமந்து செல்ல உள்ளது.
இந்தநிலையில் இஸ்ரோ நடப்பாண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. நடப்பாண்டு ராணுவ பயன்பாட்டுக்காக 5 செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டு உள்ளது. இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-
இந்த ஆண்டு ராக்கெட் மற்றும் செயற்கைகோள்கள் என 33 திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டு உள்ளோம். மே மாதம் 2-வது வாரம் பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் ரீசாட்-2பி என்ற செயற்கைகோளை சுமந்து செல்கிறது. தொடர்ந்து ஜூன் மாதம் 4-வது வாரம் பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் மூலம் கார்ட்டோசாட்-3 செயற்கைகோள் விண்ணுக்கு செலுத்தப்படுகிறது. இதில் கார்ட்டோசாட்-3 அதி நவீன ரக செயற்கைகோள்.
இதன் மூலம் குறிப்பிட்ட ஒரு பொருளை 20 சென்டி மீட்டர் வரை பெரிதாக பார்க்க முடியும். இதனால் இது உலகிலேயே சிறந்தது என கருதப்படுகிறது. குறிப்பாக எதிரிகளின் பதுங்கு குழிகள், துப்பாக்கிகளையும் துல்லியமாக காணமுடியும்.
ஜூலை மாதம் ரீசாட்-2பிஆர்1 செயற்கைகோளும், ரீசாட்-2பிஆர்2 செயற்கைகோள் அக்டோபர் மாதமும், ரீசாட்-1ஏ செயற்கைகோள் நவம்பர் மாதமும் விண்ணில் ஏவப்பட உள்ளது. ரீசாட்-2பி செயற்கைகோள் இலகு ரகத்தை சேர்ந்த உளவு செயற்கைகோளாகும்.
செப்டம்பர் மாதம் தொலை உணர்வுக்கு செயற்கைகோள்களின் புதிய தொடர் வரிசைகளை விண்ணுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டு உள்ளது. பூமியின் இயல்பு நிலையை படம் பிடிக்கும் ஜிசாட்-1 மற்றும் ஜிசாட்-2 செயற்கைகோள்கள் நவம்பர் மாதம் ஏவப்பட உள்ளது. ஜிசாட் செயற்கைகோள்கள் பூமியை தெளிவாக படம் பிடிப்பதுடன், சிவப்பு போன்ற பல நிறமாலைகளையும் கொண்டது. இதில் நம் நாட்டின் நிலப்பரப்பின் வரைபடத்தை தெளிவாக காண்பிக்கும் திறன் கொண்டது.
இந்த செயற்கைகோள் ராணுவம் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காகவும் செயல்படும். பழைய செயற்கைகோள்கள் மூலம் 22 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே ஒரு குறிப்பிட்ட பகுதியை பார்க்க முடியும். ஆனால் ஜிசாட் செயற்கைகோள் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்கள் ஸ்கேன் செய்து வரைபடமாக்கவும் முடியும் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளை கொண்டது.
ராணுவ பயன்பாட்டுக்கான செயற்கைகோள்கள் தவிர, சந்திராயன்-2 திட்டம் சோதனைகளும் பி.எஸ்.எல்.வி. மற்றும் எஸ்.எஸ்.எல்.வி. என்று அழைக்கப்படும் சிறிய எடை கொண்ட பொருட்களை கொண்டு செல்லும் ராக்கெட் மூலம் இந்த ஆண்டு பரிசோதனை செய்யப்படுகிறது. நடப்பாண்டு ராணுவ பயன்பாட்டுக்காக 5 செயற்கைகோள்களை விண்ணுக்கு ஏவ திட்டமிடப்பட்டு உள்ளது.