சென்னை,
சென்னையை அடுத்த பள்ளிக்கரணையைச் சேர்ந்த மாணவர் கார்த்திக் (வயது 13), மேடவாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டுப்பாடம் செய்யவில்லை எனக்கூறி மாணவர் கார்த்திக்கை பள்ளியின் தமிழ் ஆசிரியர் இரும்பு ஸ்கேல் மூலம் தலையின் பின்பகுதியில் அடித்து உள்ளார்.
இதன்காரணமாக அவரது இடது கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து எழும்பூர் கண் ஆஸ்பத்திரியில் மாணவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவரது கண் பார்வையை சரி செய்ய முடியாததால் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தை மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி துரை ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்து(சூமோட்டோ) வழக்காக எடுத்து விசாரித்தார்.
பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், வீட்டுப்பாடம் செய்யவில்லை என்பது போன்ற காரணங்களுக்காக பள்ளி மாணவர்கள் உடல் ரீதியாக தாக்கப்படுவதை தடுக்க மாநில அளவில் பள்ளிக்கல்வித்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? மாணவரை தாக்கிய ஆசிரியர் மீது எடுத்த நடவடிக்கை என்ன? கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ள மாணவனுக்கு தமிழக அரசு சார்பில் இழப்பீடு எதுவும் வழங்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர், இயக்குனர் ஆகியோர் 2 வாரத்துக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி உள்ளார்.