தமிழக செய்திகள்

ஒரு லட்சம் குடும்பங்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் திட்டம் - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

ஆரோக்கியம் என்ற சிறப்பு திட்டத்தின் மூலம் சென்னையில் நோய் கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் ஒரு லட்சம் குடும்பங்களுக்கு கபசுர குடிநீர் சூரண பொட்டலங்கள் வழங்குவதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கொரோனா வைரஸ் தொற்று நோயினைத் தடுக்கும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல உத்திகளைக் கையாண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மத்திய ஆயுஷ் அமைச்சகம் கொரோனா வைரஸ் தொற்று நோயினை தடுப்பதற்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கியது. அதில் நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒரு வழிகாட்டுதலை வழங்கியது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில் 11 மருத்துவ வல்லுனர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவில் அரசு மற்றும் தனியார் துறைகளைச் சார்ந்த மூத்த இந்திய மருத்துவர்களும், மூத்த அலோபதி மருத்துவர்களும் இடம்பெற்று, ஆலோசனை செய்து அரசுக்கு தங்களுடைய பரிந்துரைகளை வழங்கினார்கள்.

அதில், மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களை கருத்தில் கொண்டு, சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி மற்றும் ஓமியோபதி உள்ளிட்ட மருத்துவ முறைகளில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வழிமுறைகளை மக்கள் பயன்படுத்திக் கொள்ள ஆரோக்கியம் என்ற சிறப்புத் திட்டம் மூலம் வழிமுறைகளை வெளியிட பரிந்துரைகளை வழங்கினார்கள்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வல்லுனர்களின் பரிந்துரைகளை ஏற்று, தமிழ்நாட்டு பொதுமக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளவும், சிகிச்சை பெற்ற பின் உடல்நலத்தைப் பேணவும் 23-ந்தேதி (நேற்று) ஆரோக்கியம் என்ற சிறப்பு திட்டத்தினைத் தொடங்கி வைத்து, நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவதற்கும் உடல் நலம் பேணுவதற்கும், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுரக் குடிநீர் சூரணப் பொட்டலங்களை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து சென்னை மாநகரில் நோய் கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் ஒரு லட்சம் குடும்பங்களுக்கு கபசுர குடிநீர் சூரணப் பொட்டலங்கள் வழங்கப்படும்.

இந்தச் சிறப்புத் திட்டத்தின் வழிமுறைகள், கொரோனா நோய்க்கான சிகிச்சை அல்ல எனவும், பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மருத்துவ ரீதியாக ஆய்வு செய்யப்பட்ட வழிமுறைகள் எனவும் தெளிவுபடுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்