தமிழக செய்திகள்

ஆதரவற்ற குழந்தைகளுக்கு ‘அ.தி.மு.க. அரசு தாய்-தந்தையாக, உற்ற துணையாக இருக்கும்’ - எடப்பாடி பழனிசாமி உருக்கம்

ஆதரவற்ற குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்-அமைச்சர், ஆதரவற்ற குழந்தைகளுக்கு அ.தி.மு.க. அரசு தாய்-தந்தையாக, உற்ற துணையாக இருக்கும் என்று தெரிவித்தார்.

தூத்துக்குடி,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளையொட்டி, தூத்துக்குடி மாவட்டம், அடைக்கலாபுரத்தில் உள்ள புனித சூசை அறநிலைய இல்லத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்றார். அங்கு ஆதரவற்ற குழந்தைகளுடன் கலந்துரையாடிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

இந்த அறநிலைய இல்லத்தின் செயலாளர், எங்களுக்கு அரசின் மூலமாக பள்ளி குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் எல்லாம் கிடைக்கிறது, சைக்கிள் கூட கிடைக்கிறது. ஆனால் மடிக்கணினி கிடைக்கவில்லை. ஆகவே, எங்களுடைய மாணவர்கள் உயர்கல்வி படிப்பதற்கும், பொது அறிவை பெருக்கி கொள்வதற்கும் வாய்ப்பில்லாத சூழ்நிலை இருக்கிறது. எனவே, அரசின் சார்பாக மடிக்கணினி வழங்கப்பட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்ற ஒரு கருத்தை சொன்னார்.

இந்த இல்லத்தில் படிக்கும் தாய்-தந்தை இல்லாத இந்த குழந்தைகளுக்கு அ.தி.மு.க. அரசு தாய் தந்தையாக இருந்து உங்களுக்கு உற்ற துணையாக இருக்கும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அறநிலைய இல்லத்தின் செயலாளர் வைத்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற செய்தியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிளஸ்-1 படிக்கின்ற மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வேண்டும் என்று கேட்டு இருக்கின்றார். இந்த ஆண்டு முதல் பிளஸ்-1 படிக்கின்ற மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகிறது. வருகிற ஜூன் மாதம் தொடங்கும் போது, இந்த புனித சூசை அறநிலையம் நடத்துகின்ற பள்ளியில் பிளஸ்-1 படிக்கின்ற மாணவர்களுக்கு மடிக்கணினிகள் அரசின் சார்பாக வழங்கப்படும்.

அதுமட்டுமல்ல, டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஏ.சி.சண்முகம், இந்த பள்ளியில் படிக்கின்ற மாணவ-மாணவிகளுக்கு உணவு வழங்கும் வகையில், 2 லாரி லோடு அரிசியினை உங்களுக்கு விலையில்லாமல் வழங்குகிறார். அதோடு அவர் தன்னுடைய மாவட்டத்திலே தாய்-தந்தை இல்லாத 100 குழந்தைகளை வளர்த்து கொண்டு இருக்கிறார்.

மேலும், நிறைய பேருக்கு தன்னுடைய கல்லூரியிலே இலவசமாக கல்வி கற்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கி தந்திருக்கிறார். இங்கே படிக்கின்ற குழந்தைகளுக்கு தாய்-தந்தை இல்லை என்ற நிலையை போக்கக்கூடிய சூழ்நிலையை எங்களுடைய அரசு உருவாக்கும்.

இந்த இல்லத்தை தொடங்கி 166 ஆண்டுகள் ஆகிறது என்று குறிப்பிட்டார்கள். முன்னாள் பிரதமர் நேருவும், பெருந்தலைவர் காமராஜரும், அ.தி.மு.க.வை உருவாக்கிய எம்.ஜி.ஆரும் வருகை தந்து, கால் பதித்த இடம் இந்த இல்லமாகும். அந்த இடத்தில் நானும் வந்து உங்களோடு சேர்ந்து கலந்துரையாடியதில் உண்மையிலேயே பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இவர்கள் எல்லாம் வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணித்த தலைவர்கள். அப்படி நாட்டிற்காக தன்னை அர்ப்பணித்த போற்றுதலுக்கு உரிய தலைவர்கள் இந்த இல்லத்திற்கு வந்து சிறப்பித்து இருக்கிறார்கள். இந்த இல்லம் மேலும் மேலும் வளர்ந்து சேவை புரிய என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, டாக்டர் சி.விஜயபாஸ்கர், தமிழக அரசிற்கான டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், எம்.எல்.ஏ.க்கள் எஸ்.பி.சண்முகநாதன், சின்னப்பன், டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஏ.சி.சண்முகம், தமிழக அரசின் தலைமை செயலாளர் கே.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்