சென்னை,
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்', மக்கள் கிராம சபை' கூட்டங்கள் மூலம் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மு.க.ஸ்டாலின் பங்கேற்ற மக்கள் கிராம சபை கூட்டம் பிரசார பயணம் கடந்த 24-ந் தேதியோடு நிறைவடைந்தது.
இந்தநிலையில் அவர் தனது அடுத்தக்கட்ட தேர்தல் பிரசார பயண திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்தில் அவருடைய உருவப்படத்துக்கு மரியாதை செலுத்திவிட்டு மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தனது புதிய பிரசார பயண திட்டம் குறித்து கூறியதாவது:-
கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் எல்லாத்துறைகளிலும், எல்லா வகைகளிலும் அதல பாதாளத்துக்கு போய்விட்டது. அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை சொல்ல வேண்டும் என்றால், தமிழகத்தின் கடன் சுமை ரூ.5 லட்சம் கோடி, எல்லாத்துறைகளிலும் பல்லாயிரக்கணக்கான கோடி கொள்ளை, தமிழக உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைத்திருப்பது, பெரிய முதலீடுகளை ஈர்க்க முடியாத மாநிலமாக தமிழகத்தை மாற்றியது, வேலைவாய்ப்புகளை உருவாக்காமல் பல லட்சம் இளைஞர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி வைத்திருப்பது, விஷம் போல விலைவாசி உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீரழிவு, விவசாயிகளை தொடர்ந்து வஞ்சித்துக் கொண்டிருப்பது, சமூகநீதியை உருக்குலைத்தது, இப்படி நம்பி வாக்களித்த மக்களுக்கு பல்வேறு வகைகளில் துரோகம் செய்துக்கொண்டிருக்கிற அரசுதான் பழனிசாமி தலைமையில் இருக்கிற அ.தி.மு.க. அரசு.
தி.மு.க.வை பொறுத்தவரையில் தேர்தல் நேரத்தில்தேர்தல் அறிக்கையை வெளியிடுவோம். அதில் தொலைநோக்கு திட்டங்கள் இருக்கும். ஆனால் இந்த முறை அதைவிட முக்கியமான ஒன்று தமிழ்நாட்டு மக்களுக்கு அவசியம் தேவைப்படுகிறது. அதை நான் தற்போது சொல்கிறேன். மு.க.ஸ்டாலின் ஆகிய நான், தமிழ்நாட்டு மக்களாகிய உங்கள் முன்னிலையில் ஒரு உறுதி அளிக்கிறேன். உங்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதே என்னுடைய முதல் பணி. எனது அரசினுடைய முதல் 100 நாட்கள் போர்க்கால அடிப்படையில் உங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அர்ப்பணிக்கப்படும். இதற்கு நான் பொறுப்பு. இதுவே தமிழ்நாட்டு மக்களுக்கு நான் அளிக்க கூடிய உறுதிமொழி. (இதே உறுதிமொழி வாசகத்தை மு.க.ஸ்டாலின் மீண்டும் ஒரு முறை வாசித்தார்). கோரிக்கை மனுக்களை பெறுவதற்காக மக்களை நோக்கிய என்னுடைய பயணத்தை வருகிற 29-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் நான் தொடங்கப்போகிறேன்.
உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்று இந்த பயணத்துக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பிரசார பயணத்தை திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்துதான் தொடங்க போகிறேன். அடுத்த 30 நாட்களில் தமிழகத்தில் இருக்கிற 234 தொகுதிகளிலும் உள்ளடக்கிய கலந்துரையாடல் கூட்டங்களில் நான் பங்கேற்க இருக்கிறேன்.
நான் கலந்து கொள்ள உள்ள கூட்டங்களில் அந்த தொகுதியை சார்ந்த கிராமம் அல்லது வார்டுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு என்னிடம் கோரிக்கை மனுக்களை தரலாம். அந்த இடங்களில் ஒவ்வொருவரின் கோரிக்கைகள் அடங்கிய முழு தகவல்களுக்கும், குறிப்பிட்ட தனித்தனி பதிவு எண் கொண்ட ஒரு விண்ணப்ப படிவம் கொடுக்க போகிறோம். (அந்த விண்ணப்ப படிவத்தை நிருபர்கள் முன்பு மு.க.ஸ்டாலின் காண்பித்தார்). இந்த விண்ணப்ப படிவத்தை பெற்றதற்கான ஒப்புகைச்சீட்டு வழங்கப்படும். நானே அனைத்து மனுக்களையும் சேகரித்து மக்கள் முன்பே பாதுகாப்பாக சீல்' வைப்பேன். இந்த கூட்டங்களில் நேரடியாக கலந்து கொள்ள இயலாதவர்கள் ஸ்டாலின் அணி செயலி (StalinAni2021) மூலமாக இதற்கு என்று உருவாக்கப்பட்ட www.stalinani.com என்ற இணையதளத்தின் வாயிலாகவோ அல்லது 9171091710 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொண்டோ, மக்கள் தங்களுடைய பிரச்சினைகளை பதிவு செய்யலாம்.
இந்த தேர்தல் முடிந்து, தி.மு.க. ஆட்சி அமைந்ததும் 100 நாட்களில் மக்களின் அனைத்து கோரிக்கை மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதை எப்படி செய்ய முடியும் என்ற கேள்வி உங்களுக்குள் வரலாம். கருணாநிதி சொன்னதை செய்வார், செய்வதை சொல்வார். அதனால்தான் அவருடைய வீட்டை தேர்ந்தெடுத்து, கருணாநிதி வழியில் நானும் சொன்னதை செய்வேன், செய்வதைத்தான் சொல்வேன்'.
தமிழகம் முழுவதும் வாங்கும் மனுக்களை நிறைவேற்ற என்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் தமிழக அரசின் சார்பில் ஒரு தனித்துறை உருவாக்கப்படும். ஏற்கனவே அப்படி இருக்கிறதே? எதற்கு புதிதாக என்று கேட்கலாம்.
பெரிய திட்டங்கள், பாலங்கள் குறித்து மக்கள் மனுக்களை கலெக்டர் அலுவலகங்களில் கொடுப்பதற்கு தனி துறைகள் இருக்கிறது. ஆனால் இந்த திட்டத்துக்கு என்று தனித்துறை ஒன்று உருவாக்கப்பட்டு, கவனிக்கப்படும். அந்த துறை மாவட்ட ரீதியாக இந்த மனுக்களை பிரித்து, பரிசீலித்து, அதனை உடனடியாக நிறைவேற்றி தரக் கூடிய வாக்குறுதியை தமிழ்நாட்டு மக்களுக்கு நான் வழங்குகிறேன். தொகுதிவாரியாக, கிராமம்வாரியாக முகாம்கள் அமைக்கப்பட்டு, இந்த பிரச்சினைகள் குறித்து நேரடியாக விசாரணை நடத்தி, அதை நிறைவேற்றி தருவோம்.
அதாவது, கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. அரசாங்கம் செய்ய தவறிய அந்த பிரச்சினைகளை எல்லாம் தி.மு.க. அரசாங்கம் பொறுப்பு ஏற்றுக்கொண்ட பிறகு நிச்சயமாக செய்து கொடுக்கும். இந்த கடமையை தி.மு.க. அரசு நிறைவேற்றி முடிக்கும்போது, தமிழகத்தில் சுமார் 1 கோடி குடும்பங்களின் கோரிக்கைகளாவது நிறைவேற்றப்பட்டு இருக்கும்.
அண்ணா, கருணாநிதி, தமிழ்நாட்டு மக்கள் மீது ஆணையாக நான் இதை உறுதியளிக்க கடமைப்பட்டு இருக்கிறேன். உங்கள் குறைகளை சொல்லுங்கள். நான் நிறைவேற்றி வைக்கிறேன். உங்கள் மனுக்களுக்கு நான் பொறுப்பு. நான் மட்டுமே பொறுப்பு. சொன்னதை செய்வான். செய்வதைத்தான் சொல்வான்' இந்த ஸ்டாலின். இவ்வாறு அவர் கூறினார்.
எந்தெந்த பிரச்சினைகள் தீர்க்கப்படும்?
அதைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- தீர்க்கப்படும் பிரச்சினைகள் அரசு சம்பந்தமானதா அல்லது தனிப்பட்ட பிரச்சினைகளா?
பதில்:- அரசு சம்பந்தமான பிரச்சினைகள்தான். உதாரணமாக குடிநீர், பட்டா, ஓய்வூதியம், முதியோர் உதவி தொகை, சான்றிதழ் கிடைக்காதது போன்ற பிரச்சினைகளுக்குதான் தீர்வு காணப்படும். பாலங்கள் கட்டுவது, கட்டிடம் கட்டுவது போன்ற பிரச்சினைகள் தனி.
கேள்வி:- ஏற்கனவே முதல்-அமைச்சர் குறைதீர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறதே?
பதில்:- அது பெயரளவில்தான் செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதையும் வேகப்படுத்தி முறைப்படுத்துவோம்.
கேள்வி:- தொகுதியில் எப்படி மக்களை சந்திக்க போகிறீர்கள்?
பதில்:- தலைவர் (மு.க.ஸ்டாலின்) இந்த தேதியில் தொகுதிக்கு வருகிறார். உங்களுடைய குறைகளை தெரிவிக்கலாம் என்று தி.மு.க. சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்படும். காலை 8 மணிக்கு ஆரம்பித்து மதியம் 1 மணி வரைக்கும் இந்த நிகழ்ச்சி நடக்கும். நான் கூட்டத்தில் மனுக்களை வாங்கி பெட்டியில் போட்டு சீல்' வைத்துவிடுவேன். ஆட்சிக்கு வந்து உட்கார்ந்த பிறகு, முதல் வேலையாக நான்தான் அந்த சீலை பிரிப்பேன். பிரித்து 100 நாட்களில் இதற்கு என்று தனியாக அமைக்கப்படும் துறைகள் மூலம் இந்த பிரச்சினைகள் எல்லாம் தீர்த்து வைக்கப்படும்.
கேள்வி:- தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை எப்போது நடக்கும்?
பதில்:- தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் முறையாக வெளியே தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது தி.மு.க. பொதுசெயலாளர் துரைமுருகன் உடனிருந்தார்.
கோபாலபுரத்தில் கருணாநிதி இல்லத்தின் வெளியே சாலையில் இருக்கைகள் போடப்பட்டு பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.