தமிழக செய்திகள்

லாரிகளில் வரும் தண்ணீரை பிடிப்பதற்கு பிளாஸ்டிக் குடத்துக்கு கடும் கிராக்கி 80 சதவீதம் விற்பனை அதிகம்

லாரிகளில் வரும் தண்ணீரை பிடிப்பதற்கு பிளாஸ்டிக் குடத்துக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு இருக்கிறது. சாதாரண நாட்களை விட 80 சதவீதம் விற்பனை அதிகமாகி இருப்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சென்னை,

தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அன்றாட தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கூட முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். குடிநீர் பிரச்சினைக்காக சில இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலிலும் ஈடுபடுகின்றனர்.

குடிநீர் வாரியம் மூலம் அவ்வப்போது தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதில் வரும் தண்ணீரை பிடிப்பதற்கு பிளாஸ்டிக் குடத்தின் தேவை அதிகரித்து இருக்கிறது.

பொதுவாக அடுக்குமாடி குடியிருப்புகளில் இந்த பிளாஸ்டிக் குடத்துக்கு பெரிய அளவில் வேலை இருக்காது. காரணம், தண்ணீர் தொட்டியில் இருந்து மோட்டார் மூலம் நீரை ஏற்றி வீடு முழுவதும் குழாய் மூலம் தண்ணீரை பயன்படுத்தி வந்தனர்.

ஆனால் இப்போது நிலத்தடி நீர் குறைந்து போனதாலும், லாரிகளில் இருந்து தண்ணீர் வருவது அரிதாகி போனதாலும் குடிநீர் வாரியம் மூலம் லாரிகளில் வரும் தண்ணீரை பிடிக்க குடங்களை அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் அதிகளவில் வாங்க தொடங்கி இருக்கின்றனர்.

இதனால் பிளாஸ்டிக் குடத்துக்கு தற்போது கடும் கிராக்கி ஏற்பட்டு இருக்கிறது. சாதாரண நாட்களை விட தற்போது 80 சதவீதம் வரை குடம் விற்பனை அதிகரித்து இருப்பதாக உற்பத்தியாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மாதவரத்தில் பிளாஸ்டிக் குடம் உற்பத்தி செய்யும் பிரேம் குமார் என்பவர் கூறியதாவது:-

பிளாஸ்டிக் குடம் விற்பனை இந்த ஆண்டு அதிகமாக இருக்கிறது. சாதாரண நாட்களை விட 80 சதவீதம் வரை அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. எங்களால் விற்பனையாளர்களுக்கு பிளாஸ்டிக் குடத்தை உற்பத்தி செய்து அனுப்ப முடியவில்லை. அந்த அளவுக்கு பிளாஸ்டிக் குடம் கேட்டு விற்பனையாளர்கள் நிறைய பேர் முன்பதிவு செய்கிறார்கள்.

8 ரகங்களில் குடங்கள் இருக்கின்றன. நாங்கள் ரூ.46 முதல் ரூ.90 வரை விற்பனையாளர்களுக்கு குடங்களை வழங்குகிறோம். அவர்கள் ரூ.60 முதல் ரூ.140 வரை விற்பனை செய்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

அதிலும் குறிப்பாக தென் சென்னை பகுதிகளில் பிளாஸ்டிக் குடத்துக்கு தேவை அதிகரித்து இருப்பதாக விற்பனையாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். அதேபோல், காஞ்சீபுரம், வேலூர் பகுதிகளிலும் பிளாஸ்டிக் குடத்துக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு இருக்கிறது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு