சென்னை,
தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், அ.தி.மு.க. உறுப்பினர் டாக்டர் பரமசிவம், தி.மு.க. உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், காங்கிரஸ் உறுப்பினர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினர். அப்போது அவர்கள் பேசியதாவது:-
டாக்டர் பரமசிவம் (அ.தி.மு.க.):- 8 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்பட்ட ரத்த சோகை காரணமாக அவருக்கு ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கொண்டுவந்து ஏற்றப்பட்டுள்ளது. அந்த ரத்தம் எச்.ஐ.வி. பாதித்ததாக இருந்துள்ளது. இந்த மிகப்பெரிய தவறுக்கு அரசு நிர்வாகம் காரணமா?, தனி நபர் காரணமா?. தனி மனித தவறாகவே இதை பார்க்க முடிகிறது. ரத்தம் ஏற்றுவதற்கு முன்பாக, அதை பரிசோதனை செய்திருக்க வேண்டும். இனிவரும் காலங்களில் இதுபோன்று நடக்கக்கூடாது.
கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் (தி.மு.க.):- ரத்த தானம் தவறாக நடந்துள்ளது. தமிழ்நாட்டில் இதுபோன்று இதற்கு முன்பு நடந்ததே இல்லை. இதற்கு காரணமானவர்கள் என்று சொல்லி 3 ஊழியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 3 பேருமே தற்காலிக ஊழியர்கள் தான். கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் எப்படி ஏற்றப்பட்டது. இனி அந்தப்பெண் எச்.ஐ.வி. பாதித்த நிலையிலேயே தான் தொடர்ந்து வாழ முடியும். பிறக்க இருக்கும் குழந்தையும் எச்.ஐ.வி. பாதிப்பு இல்லாமல் பிறக்குமா?. எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை தேவை. பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்வாதாரத்துக்கு அரசு என்ன செய்யப்போகிறது?.
கே.ஆர்.ராமசாமி (காங்கிரஸ்):- ரத்தம் தானம் பெறும்போதே அது தகுதியானதாக இருக்கிறதா? என்பதை பரிசோதித்து பார்க்க வேண்டும். எச்.ஐ.வி. பாதிப்பு இருக்கிறதா? என்பதை பரிசோதித்து பார்ப்பது கிடையாது. தவறுக்கு காரணமான 3 பேர் மீது நடவடிக்கை எடுத்ததாக சொல்கிறீர்கள். தவறுக்கு உண்மையான காரணம் யார்?. அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?. தவறு செய்தவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினார்கள்.
அதற்கு பதில் அளித்து சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ் கர் பேசியதாவது:-
நடந்த நிகழ்வுக்காக அரசு வேதனைப்படுகிறது. முதற்கட்ட விசாரணை அனைவரிடமும் நடைபெற்றது. சுகாதாரத்துறை செயலாளர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். விசாரணையின் அடிப்படையில் லேப் டெக்னீசியன்கள் 3 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளது. ரத்தம் வழங்கிய ரமேசுக்கு எச்.ஐ.வி. இருப்பது 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர் ரத்தம் வழங்கியபோதே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை அவரிடம் நேரடியாக அழைத்து சொல்லலாம் என்று தொடர்பு கொண்டபோது, அவர் பெங்களூருவில் இருப்பதாகவும், வெளியூரில் இருந்து வருவதாகவும் தெரிவித்து வந்துள்ளார். கடைசியாக அவரது அண்ணிக்கு ரத்த தானம் செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 8 லட்சம் பேரிடம் ரத்தம் தானமாக பெறப்படுகிறது. அந்த ரத்தம் 12 லட்சம் நோயாளிகளுக்கு தேவைக்கு ஏற்ப ஏற்றப்படுகிறது. தானமாக பெறப்படும் ரத்தத்தில் எச்.ஐ.வி., மலேரியா போன்ற சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதையும் தாண்டி இந்த தவறு நடந்துள்ளது. கண்காணிப்பாளர்களிடமும் தற்போது விசாரணை நடக்கிறது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்வாதாரத்துக்கு தேவையான உதவியினை அரசு செய்யும். பிறக்க இருக்கும் குழந்தைக்கு 100 சதவீதம் எச்.ஐ.வி. தொற்று ஏற்படாத வகையில் சிகிச்சை அளிக்கப்படும். பாதிக்கப்பட்ட பெண்ணை கண்காணிக்க 10 பேர் கொண்ட டாக்டர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. வேறு எங்கும் சிகிச்சை பெற விரும்பினாலும் அரசு செலவை ஏற்றுக்கொள்ளும். தவறுக்கு காரணமானவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த விவகாரத்தில், ஒரு அப்பாவி பெண்ணின் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது.
இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக அமைச்சர் இங்கே கூறுகிறார். ஆனால், நான் கேள்விப்பட்ட வரையில் கீழ்மட்டத்தில் இருக்கக்கூடிய ஊழியர்கள் மீது தான் கடுமையாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது. அதிலும், சில பேர் அப்பாவிகள் இருக்கின்றார்கள். ஆனால், இதில் உயர் அதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களும் இதற்கு காரணமாக இருந்திருக்கின்றார்கள். அவர்கள் மீது இந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா?. இவ்வாறு அவர் கூறினார்.
அதற்கு பதில் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், இந்தப் பிரச்சினை குறித்து விசாரிக்க ஒரு கமிட்டி போடப்பட்டுள்ளது. முழு அளவில் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. எந்த பாரபட்சமுமின்றி காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின், கமிட்டி போடுவது என்பது, கிணற்றிலே கல்லைப் போடுவதற்கு ஒப்பாக சொல்வது உண்டு. இது அரசினுடைய நிலையைப் பொறுத்து சொல்வது. எனவே, இது ஒரு முக்கியமான பிரச்சினையாக இருக்கின்ற காரணத்தால் ஒரு நாளைக் குறிப்பிட்டு இத்தனை நாட்களுக்குள் என ஒரு கால நிர்ணயம் செய்தால் தான் ஒரு முறையான தீர்ப்பு கிடைக்கும் என்றார்.
அதற்கு அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், விரைவாக விசாரணை அறிக்கை பெற்று கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.