தமிழக செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்

கொரோனாவால் உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும் என்றும், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் நிவாரணமாக தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினத்தந்தி

சென்னை,

கொரோனா குறித்து விவாதிக்க தி.மு.க. சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்கப்பட்டு இருந்தது. ஆனால் ஊரடங்கு காரணமாக அனுமதி மறுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் காணொலி காட்சி வழியாக நேற்று நடந்தது.

தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களான தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் ஆகியோர் காணொலி காட்சி வழியாக பங்கேற்றனர். அவர்களுடன் மு.க.ஸ்டாலின் உரையாடினார்.

இந்த கூட்டம் தொடங்கியதும் கொரோனாவால் உயிர் இழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

*கொரோனா நோய்த்தொற்றால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பரிவுத் தொகையாக தலா ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று இந்த கூட்டம் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

*வரலாறு காணாத இந்தக் கொடிய நோயின் கோரப் பிடியிலிருந்து மக்களை மீட்டுப் பாதுகாக்க மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள், கூட்டுறவுப் பணியாளர்கள், காவல்துறையினர் என தங்களின் இன்னுயிர் பற்றிக் கிஞ்சித்தும் கவலை கொள்ளாமல் தன்னலமற்ற சேவை புரிந்து வருவோருக்கு அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறது.

தூய்மைப் பணியாளர்களை வாகனங்களில் அழைத்துச் செல்லும் போது உரிய சமூக இடைவெளி விட்டு அமர வைப்பதில்லை என்றும், அவர்களுக்கு முக கவசம் உள்ளிட்ட உரிய தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுகிறது. எனவே, கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சைப் பணிகளில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் உரிய தரமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கு சிறப்பூதியம் மற்றும் சிறப்பு ஊதிய உயர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்றும், பணியின் போது உயிரிழக்க நேரிடும் ஒவ்வொரு ஊழியரின் குடும்பத்திற்கும் தற்போது அரசு அறிவித்துள்ள 10 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை மிக மிக குறைவு என்பதால் ஒரு கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட வேண்டும்.

*தமிழகத்திற்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை, போர்க்கால அடிப்படையில் மாநில அரசே கொள்முதல் செய்யவும், இதுவரை கொள்முதல் செய்யப்பட்டவற்றை உடனே பெறவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

*ஊரடங்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கே முழு நிவாரணமும் போய்ச் சேராத சூழலில், தற்போது 3.5.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கினால் விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மேலும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். ஆகவே அவர்களின் குறைந்தபட்ச வாழ்க்கைத் தேவையை ஈடுகட்ட அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.5,000 சிறப்பு நிவாரண உதவியாக வழங்கிட வேண்டுமென்றும், ஊரடங்கினைச் சரியாக நடைமுறைப்படுத்திடும் வகையில் அனைவருக்கும் அத்தியாவசியப் பொருட்களை வீட்டிற்கே கொண்டு சென்று வழங்கிட வேண்டும் என்றும் இந்த கூட்டம் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.

மாநில அரசு கோரியுள்ள ரூ.15 ஆயிரம் கோடியை உடனடியாக மத்திய அரசு வழங்கிட வேண்டும். அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் சிறப்பு நிவாரண உதவி வழங்குவதற்கு ஏற்ற நிதி உதவியை மத்திய அரசு வழங்கிட முன்வர வேண்டும்.

*கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து கேரள மாநிலத்தை மீட்க அந்த மாநில அரசு 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, அதற்கான செயல்திட்டத்தை தயாரித்து, முற்போக்கான வழியில் செயல்படுத்தி, மாதிரி மாநிலமாக உருவாகி வருகின்ற வேளையில், தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்காத மத்திய அரசை தட்டிக்கேட்க தைரியம் இல்லாமல் யானைப் பசிக்கு சோளப்பொரி என்பது போல், வெறும் ரூ.3,280 கோடி நிவாரணத் தொகையை ஒதுக்கிவிட்டு முற்றிலும் செயலிழந்து நிற்பதற்கு அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் மிகுந்த வேதனையை தெரிவிக்கிறது.

மாநிலத்திற்கு தேவையான நிதியை உடனடியாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்துப் பெற வேண்டும்.

உடனடியாக குறைந்தபட்சம் முதற்கட்டமாக ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து அதற்கான செயல் திட்டம் ஒன்றை மாநில அரசு அறிவிக்க வேண்டும்.

*அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு இந்த கூட்டம் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது.

* அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும், நலிவடைந்துள்ள சிறு, குறு தொழில்களுக்கும் தேவையான நிவாரண உதவிகள், சிறப்பு மானியங்கள் அளித்திடவும், மாநிலத்தில் தேக்க நிலையை எட்டிவிட்ட தொழில் வளர்ச்சியை மீண்டும் முடுக்கிவிடவும், தேவையான ஒரு விரிவான நிவாரண பொருளாதார உதவிக்கான செயல்திட்டத்தை அ.தி.மு.க. அரசு உடனடியாக வகுக்க வேண்டும் என்று இந்த கூட்டம் கேட்டுக் கொள்கிறது. அதோடு, மத்திய அரசின் அறிவிப்பின் அடிப்படையில் வங்கிகள் ஒத்திவைத்துள்ள கடன்களுக்கான வட்டியை முழுமையாக ரத்து செய்வது, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பது, தமிழகத்தில் வாழும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்து உணவுகள் வழங்குவது, வெளிநாடுகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் தமிழகம் திரும்ப விரும்புவோர்களுக்கு உரிய ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக செய்து கொடுப்பது, விசைத்தறி தொழிற்சாலைகள் உள்ளிட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்களில் பணிபுரிந்து வேலையின்றி தவித்து வரும் ஏறத்தாழ 50 லட்சம் தொழிலாளர்களுக்கு உரிய நிதி உதவிகளை வழங்குவது, தமிழகத்தில் பட்டினிச்சாவுகள் நிகழாமல் தடுப்பதற்குத் தேவையான திட்டங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து அனைத்துத் தரப்பு மக்களையும் காப்பாற்றிட வேண்டும் எனவும், ஊரடங்கு நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தையும் எவ்வித காலதாமதமும் இன்றி உடனடியாக விடுவிப்பதோடு, இனிவரும் நாட்களில் வாகனங்களைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை அ.தி.மு.க. அரசு கைவிட வேண்டும் என்றும் இந்த அனைத்துக் கட்சி கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

* ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், கொரோனா தொற்று குறித்து மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது வழங்கிடும் நல்வாழ்வுக்கான அறிவுரைகளையும் முழுமையாகக் கடைப்பிடித்து தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும், நாட்டையும் கொரோனா தொற்றின் கோரப்பிடியிலிருந்து விடுவித்துப் பாதுகாத்திட முன்வர வேண்டும் என்று தமிழக மக்கள் அனைவரையும் இந்த கூட்டம் அன்புடன் கேட்டுக் கொள்கிறது என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை