அவினாசி,
ரூ.1,652 கோடி செலவில் செயல்படுத்தப்படும் அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இதன்மூலம் 3 மாவட்ட மக்களின் 60 ஆண்டு கனவு நிறைவேறியது.
அத்திக்கடவு-அவினாசி திட்டம்
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஏரிகள், குளங்களில் தண்ணீர் நிரப்பி அதன்மூலம் நிலத்தடி நீரை செறிவூட்டும் வகையிலும், பில்லூரில் இருந்து பவானி ஆற்றில் உபரியாக செல்லும் தண்ணீரை பாசனத்துக்கும், குடிநீருக்கும் பயன்படுத்தும் வகையிலும் அத்திக்கடவு-அவினாசி திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை 60 ஆண்டுகளுக்கு முன்பு எழுந்தது. காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது இந்த திட்டத்தை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டார். ஆனால் அவர் பதவியை விட்டு சென்றபின் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
சில ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இந்த கோரிக்கை தலை தூக்கியது. எனவே, தேர்தல்களின் போது அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் வாக்குறுதியாக அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை வைத்தன. ஆனால் திட்டம் நிறைவேற்றுவதற்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
ரூ.1,652 கோடி
கடந்த 2016-ம் ஆண்டு அவினாசியில் விவசாயிகள் நடத்திய தொடர் உண்ணாவிரத போராட்டம், மொட்டை அடிக்கும் போராட்டம் மற்றும் இதைத் தொடர்ந்து கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களிடம் ஏற்பட்ட எழுச்சியால் இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு ஏற்பட்டது. எனவே உடனடியாக ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டன.
இந்தநிலையில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் முயற்சியால் அத்திக்கடவு-அவினாசி பாசனம், குடிநீர் மற்றும் நிலத்தடிநீர் செறிவூட்டும் நீரேற்று திட்டம் என்ற பெயரில் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.1,652 கோடியில் திட்டப்பணிகள் தொடங்கப்பட உள்ளன.
அடிக்கல் நாட்டு விழா
இதற்கான அடிக்கல் நாட்டு விழா திருப்பூர் மாவட்டம் அவினாசி புதுப்பாளையம் பகுதியில் நேற்று நடந்தது. இந்த விழாவுக்கு தமிழக சட்டமன்ற சபாநாயகர் ப.தனபால் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், கே.ஏ.செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, கே.சி.கருப்பணன், சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு விவசாயிகள், பொதுமக்களின் கரகோஷத்துக்கிடையே அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி வைத்தார். தொடர்ந்து நடந்த விழாவில் திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மகளிர் திட்டம், தாட்கோ, வேளாண்மைத்துறை, கைத்தறி துணிநூல்துறை, வருவாய்த்துறை மூலம் ரூ.66 லட்சத்து 57 ஆயிரத்து 20 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இந்த விழா மூலம் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 4 ஆயிரத்து 770 பேருக்கு மொத்தம் ரூ.8 கோடியே 52 லட்சம் மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டன.
சீர்மிகு நகரம் திட்டப்பணிகள்
திருப்பூரில் அம்ரூத் மற்றும் சீர்மிகு நகரங்கள் திட்டத்தில் ரூ.1,875 கோடியே 47 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று காலை காங்கேயம் ரோடு பத்மினி கார்டன் வளாகத்தில் நடைபெற்றது. இந்த திட்டப்பணிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி பேசினார்.
விழாவில் அவர் பேசியதாவது:-
திடமான அரசு
இன்றைக்கு வேண்டும் என்றே மு.க.ஸ்டாலின் குழப்பிக்கொண்டு இருக்கிறார். அவரால் எதுவுமே செய்ய முடியவில்லை. அவர் நினைத்தார். எத்தனையோ கனவை கண்டார். அவை அனைத்தும் கானல் நீராக போய்விட்டது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இருக்குமா? என்று நினைத்தார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு இந்த கட்சி உடைந்து போகும் என்று நினைத்தார். உடையவில்லை.
இந்த ஆட்சி 10 நாட்கள் நிலைக்குமா?, 1 மாதம் நிலைக்குமா? 6 மாதம் நிலைக்குமா?, 1 ஆண்டு நிலைக்குமா? என்று கூறினார். 2 வருடத்தை பூர்த்தி செய்து 3-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். இது மக்கள் ஆதரவோடு செயல்படுகின்ற அரசு.
இந்த அரசு எந்த திட்டத்தை செயல்படுத்தினாலும் அந்த திட்டம் முழுமையாக நடைபெற வேண்டும் என்ற அடிப்படையில் சிந்தித்து, ஆராய்ந்து பலமுறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, அந்த துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு தான் திட்டத்தை அறிவிக்கிறோம். அதன் மூலமாக குறித்த காலத்துக்குள் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. தி.மு.க. ஆட்சியின்போது ரெயில்வே பாலம் உள்ளிட்ட பால பணிகளை நிறைவு செய்ய 6 முதல் 7 ஆண்டுகள் ஆகும். அந்த பணிகள் ஜெயலலிதாவிடம் ஒப்படைத்தபோது 4 முதல் 6 ஆண்டுகளுக்குள் நிறைவு செய்யப்பட்டது.
ஒருவர் கூட விடுபடக்கூடாது
அ.தி.மு.க. அரசு தொழிலாளர்களின் நலன் கருதி சிறப்பு திட்டத்தின் மூலமாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை கொடுத்துள்ளது. வருகிற 4-ந் தேதி சென்னையில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படும். சுமார் 60 லட்சம் பேர் இந்த திட்டத்தின் மூலமாக பயன்பெறுவார்கள்.
ஏழை தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 ஆயிரம் கொடுக்கப்பட உள்ளது. எத்தனை லட்சம் பேர் இருந்தாலும் அவர்களுக்கு வழங்க தயாராக இருக்கிறோம். இந்த திட்டத்தில் ஒருவர் கூட விடுபட்டு விடக்கூடாது. அதற்காக விண்ணப்ப மனு அதிகாரிகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.