தமிழக செய்திகள்

இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் மத்திய அரசுக்கு, ஆர்.சரத்குமார் கோரிக்கை

இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் மத்திய அரசுக்கு, ஆர்.சரத்குமார் கோரிக்கை

சென்னை,

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஒரு நாட்டில் விவசாயம் இல்லாமல் எந்த ஒரு முன்னேற்றமும் இருக்காது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த விவசாயத்தை அழிக்கும் திட்டம் எதுவாக இருந்தாலும் அதனை செயல்படுத்தக்கூடாது. பருவமழை பொழியாதது, வானிலை மாற்றங்கள், வறட்சி நிலை, நிலத்தடி நீர் இல்லாமை என்று இயற்கை ஒருபக்கம் விவசாயத்தை பாதித்தாலும், மத்திய அரசு சில திட்டங்கள் வாயிலாகவும் விவசாயத்தை பாதிப்படைய செய்திருக்கிறது.

தற்போது புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தால் நிலத்தடிநீர் இல்லாமல், விவசாயம் முற்றிலும் அழிந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்த திட்டத்தை எதிர்த்து விவசாயிகள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர்களும் போராடி வருகின்றனர்.

எனவே, விவசாயத்தை பாதுகாக்கும் வகையில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மற்றும் நாடுமுழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிடவேண்டும் என்று என் சார்பிலும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பிலும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.