சென்னை,
சென்னை ஐகோர்ட்டில், டாக்டர் லோகரங்கன் என்பவர் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், நாடு முழுவதும் சுமார் 23 கோடி சமையல் கியாஸ் இணைப்புகள் உள்ளன. இந்த சமையல் கியாஸ் தொகை, அதை வீட்டில் வினியோகம் செய்வதற்கான கட்டணம் உள்ளிட்டவைகளை கியாஸ் முகவர்கள் வசூலித்து விடுகின்றனர். இருந்தாலும், வீட்டில் வந்து கியாஸ் சிலிண்டரை கொடுக்கும் நபர்கள், கூடுதலாக ரூ.20 முதல் ரூ.100 வரை கேட்கின்றனர். இவ்வாறு நாடு முழுவதும் பல கோடி ரூபாய் சட்டவிரோதமாக வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கின்றனர். இதை தராத வாடிக்கையாளர்களை அசிங்கமாக திட்டுகின்றனர். எனவே, கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும்போது, வாடிக்கையாளர்களிடம் இருந்து கூடுதலாக பணம் பெற தடைவிதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சிலிண்டர் வினியோகம் செய்யும்போது கட்டாயமாக டிப்ஸ் கேட்பதாக 2,124 வாடிக்கையாளர்கள் புகார் செய்துள்ளனர். இந்த புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், அவ்வாறு வந்த புகார்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர் என்றனர். அப்படி நடவடிக்கை எடுத்தால், அந்த விவரங்களை ஏன் இணையதளத்தில் வெளியிடவில்லை? என்று நீதிபதிகள் கேட்டனர். பின்னர் டிப்ஸ் கேட்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து விரிவான பதில் மனுக்களை பாரத் எண்ணெய் நிறுவனம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (நவம்பர்) 1-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.