சென்னை,
சென்னை ஐகோர்ட்டில், சிவக்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், திருவள்ளூர் மாவட்டம், பானவேடுதோட்டம் பஞ்சாயத்து யூனியனில் உள்ள பிடரிதாங்கல் கிராமத்தில் ஆழ்துளை கிணறுகள் மூலம் குமரேசன் உள்பட 4 பேர் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் நிலத்தடி நீரின் அளவு குறைந்து விட்டது. இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் புகைப்பட ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
ஆய்வு செய்ய உத்தரவு
இதை பார்த்த நீதிபதிகள், திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர், பூந்தமல்லி தாசில்தார் நேரடியாக சென்று ஆய்வு செய்யவேண்டும். அங்கு சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டால், சென்னை மாநகர நிலத்தடி நீர் ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி, சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். நிலத்தடி நீரை உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட மோட்டார் பம்புகள், வாகனங்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்யவேண்டும். இந்த நடவடிக்கை எடுத்தபின், அதுகுறித்து அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர்.
பறிமுதல்
இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், இந்த ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின்படி, இதுவரை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்யவில்லை. எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்னமும் சட்டவிரோதமாக நிலத்தடிநீர் உறிஞ்சப்பட்டு, பெரும் தொகைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்று கூறினார்.
இதையடுத்து, ஐகோர்ட்டு உத்தரவை செயல்படுத்தாத அதிகாரிகளுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
சட்டவிரோதமாக தண்ணீர் கடத்தப்பட்டதற்காக டேங்கர் லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, அந்த அபராதத்தொகை செலுத்தப்பட்டு விட்டால், அதன் உரிமையாளர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக அர்த்தம். அதே டேங்கர் லாரி அடுத்த முறையும் அதே குற்றச்செயலில் ஈடுபட்டால், அந்த லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்யவேண்டும்.
ஏற்கனவே இந்த ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாத திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர், பூந்தமல்லி தாசில்தார் ஆகியோர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்பதற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் இன்று (வியாழக்கிழமை) விளக்கம் அளிக்கவேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.