சென்னை,
கொரோனா நோய்த் தொற்று உலக நாடுகளையே உலுக்கி வைத்து இருக்கிறது. இதற்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிப்பதில் முன்னணி நாடுகள் போட்டி போட்டு கொண்டு இருக்கின்றன.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலுக்கும், பாதிப்புகளுக்கும் எதிரான தொழில்நுட்பங்களை கண்டறிந்து இந்த பெருந்தொற்று அபாயத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும், மாணவர்களுக்கும் ஆலோசனை வழங்கினார்.
அதன்படி, அண்ணா பல்கலைக்கழகத்தின் திருச்சி வளாக கல்லூரியின் முதல்வர் டி.செந்தில்குமார் தலைமையில் நிர்வாகிகள் ஒன்றிணைந்து ஆன்லைன் ஹேக்கத்தான் திட்டத்தை மேற்கொள்ள இருக்கின்றனர். கொரோனா ஒழிப்புக்கான ஆரோக்கிய சேது எனும் செயலியின் பயன்பாடு தான் இந்த திட்டத்துக்கு தூண்டுகோலாக அமைந்ததாக அதன் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த திட்டத்தின் கீழ் கொரோனா நோய் போன்ற பேரிடர் காலங்களில் உதவுவதற்கு ஏதுவாக ஒருங்கிணைந்த அதிவிரைவு செயலியையும், இணையதளத்தையும் உருவாக்க தொழில்நுட்ப மாணவர்களுக்கும், அந்த துறை சார்ந்த பேராசிரியர்களுக்கும் ஒருவாய்ப்பாக அமையும். இந்த தேசிய அளவிலான ஆன்லைன் ஹேக்கத்தான் திட்டத்தில் மாணவர்களும், பேராசிரியர்களும், ஆராய்ச்சியாளர்களும், தொழில் முனைவோர்களும் பங்கேற்க அண்ணா பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்து இருக்கிறது.
வருகிற 27-ந்தேதி முதல் மே மாதம் 6-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்பது எப்படி எந்த மாதிரியான செயலியை உருவாக்க வேண்டும் என்பது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு http://www.cov-id19ha-c-k-at-h-on.in/ என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.