உயிரி பல்வகைமை தினம்
தமிழ்நாடு உயிரி பல்வகைமை வாரியம் சார்பில் சர்வதேச உயிரி பல்வகைமை தினத்தை முன்னிட்டு ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் கா.ராமச்சந்திரன் பேசும்போது கூறியதாவது:-
தமிழ்நாடு செழிப்பான தாவர வகைகளைக் கொண்ட மாநிலம். 23 ஆயிரத்து 338 கிலோ மீட்டர் பரப்பளவில் காடுகள் உள்ளது. நீலகிரியில் 163 தாவர குடும்பங்களை சேர்ந்த 2,611 வகையான பூக்கும் தாவரங்கள் உள்ளன. நெல்லையில் 2,105 வகையான பூக்கும் தாவரங்கள் உள்ளன. காவிரி ஆற்றின் குறுக்கே 1,086 வகை கடல் பாசிகள் கண்டுபிடிக்கப்பட்டது. மண்டபம் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் 104 வகையான கடல்பாசிகள் உள்ளது.
பூக்கும் தாவரங்கள்
தமிழகத்தில் 1,500 வகையான பூக்கும் தாவரங்கள் மருத்துவ குணம் கொண்டவை. நீலகிரி வரையாடு, சிங்கவால் குரங்கு போன்ற அழியும் நிலையில் உள்ள விலங்குகள் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகமாக உள்ளது. யானை, புலி அதிக எண்ணிக்கையில் உள்ளன. தமிழக காடு வளர்ப்பு திட்டம் 2 கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு உள்ளது. காவூலி சம்பா, கட்டுநாயக்கன், தூயமல்லி உள்பட 189 வகையான பாரம்பரிய நெல் வகைகளை நாகப்பட்டினம், திருவாரூரை சேர்ந்த விவசாயிகள் உருவாக்கி உள்ளனர். இதில் சிலவற்றில் மருத்துவ குணங்கள் உள்ளது.
காடுகள் வளர்ப்பு திட்டம்
இந்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் சார்பில் பல்லுயிர் பரவல் பாதுகாப்பில் சிறப்பாக பணிபுரிபவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. மதுரை கோட்டத்தில் உள்ள சேடப்பட்டி பல்லுயிர் மேலாண்மை குழுவிற்கு அங்கீகாரம் வழங்கப்படுகிறது. தமிழகத்தின் இயற்கை வளங்களையும், பறவைகளையும், வன உயிர்களையும் பாதுகாக்க ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மொத்த நிலப்பகுதியில் 33 சதவீத காடுகள் உருவாக்கப்படும். சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிபடுத்த காடுகள் வளர்ப்பு திட்டம் ஊக்குவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சீனா, தமிழ்நாடு உயிரி பல்வகைமை வாரிய செயலாளர் மீட்டா பெனர்ஜி, கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கவுசல், மாவட்ட வன அலுவலர் குருசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.