தமிழக செய்திகள்

மின்துறையின் ரூ.25 ஆயிரம் கோடி சொத்துகளை தனியாரிடம் ஒப்படைக்க முயற்சி

புதுவை மின்துறையின் ரூ.25 ஆயிரம் கோடி சொத்துகளை தனியாரிடம் ஒப்படைக்க முயற்சி நடப்பதாக முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டினார்

புதுச்சேரி,

புதுவை மின்துறையின் ரூ.25 ஆயிரம் கோடி சொத்துகளை தனியாரிடம் ஒப்படைக்க முயற்சி நடப்பதாக முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டினார்.

மக்கள் நாடாளுமன்றம்

விவசாய விரோத வேளாண் சட்டங்கள், தேசிய கடல்வள மசோதா, மின்சார திருத்த சட்டம், சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை ஆகியவற்றை திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மக்கள் நாடாளுமன்ற கூட்டம் நடத்தப்போவதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி அறிவித்தது.

அதன்படி புதுவை சுதேசி மில் அருகே நேற்று மக்கள் நாடாளுமன்ற கூட்டம் நடந்தது. இதில் புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு மக்கள் நாடாளுமன்றத்தை தொடங்கி வைத்தார்.

அப்போது நாராயணசாமி பேசியதாவது:-

ரூ.25 ஆயிரம் கோடி சொத்து

நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை நேரு வலுப்படுத்தினார். பிரதமராக இருந்த வாஜ்பாய் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால் பிரதமர் மோடிக்கு அதன்மீது நம்பிக்கை இல்லை. அவரை யாரும் கேள்வி கேட்கக்கூடாது. யார் தடுத்தாலும் தான் நினைத்ததைதான் செய்வார்.

புதுவை மின்துறைக்கு ரூ.25 ஆயிரம் கோடிக்கு சொத்துகள் உள்ளது. அதை தனியாரிடம் ஒப்படைக்க முயற்சிக்கிறார்கள். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துகொண்டே செல்கிறது. ஆனால் மத்திய அரசு கலால் வரியை குறைக்காமல் பிடிவாதம் பிடித்து வருகிறது. மாநில அரசுகள் தான் குறைக்கவேண்டுமாம்.

ரூ.100 கோடி மானியம்

நாட்டில் 15 கோடி பேர் வேலையில்லாமல் உள்ளனர். இந்தநிலையில் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கிறார்கள். புதுவையில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது, ரூ.100 கோடி மானியம் பெற்றோம். ஆனால் என்.ஆர்.காங்கிரஸ் அரசு ரூ.24 கோடிதான் அதிகம் பெற்றுள்ளது.

புதுவை பட்ஜெட்டில் விவசாய திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கவில்லை. ரூ.875 கோடிதான் கட்டுமான பணிகளுக்கு நிதி உள்ளது. மீதி அனைத்தும் சம்பளம், மானியம், மின்சாரம் வாங்க போய்விடுகிறது. அடுத்த ஆண்டு முதல் சரக்கு மற்றும் சேவை வரிக்கான இழப்பீடு ரூ.1,600 கோடியும் கிடைக்காது.

இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

இந்த மக்கள் நாடாளுமன்ற கூட்ட நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி, ம.தி.மு.க. மாநில அமைப்பாளர் கபிரியேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.