சென்னை
எம்.எல்.ஏ. பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, 2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை, ஜெயலலிதா அரசில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.
அப்போது 16 பேரிடம் தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 95 லட்சம் பணம் வாங்கி வேலை வாங்கி தராமல் மோசடி செய்துள்ளதாக சென்னை அம்பத்தூரை சேர்ந்த கணேஷ்குமார் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார், செந்தில் பாலாஜி உள்ளிட்ட 3 பேர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்படலாம் என கருதிய செந்தில் பாலாஜி, முன்ஜாமின் வழங்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
என் உறவினர் எனக் கூறப்பட்ட பிரபு என்பவரிடம் பணத்தை வசூலித்து கொடுத்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அந்த நபர் என் உறவினர் அல்ல, புகார்தாரரான கணேஷ் குமாரை நான் சந்தித்ததே இல்லை மேலும் போக்குவரத்துத் துறையின் அனைத்து நியமனங்களும் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமே நடத்தப்படுகிறது.
இந்த வழக்கு தொடர்பாக கூர்க் சென்ற சக எம்.எல்.ஏ.க்களின் வாகனத்தை காவல் துறையினர் வழி மறித்து விசாரித்துள்ளனர். இவ்வழக்கில் காவல் துறையினர் கைது செய்ய முயன்று வருவதால் செந்தில் பாலாஜி முன் ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு செய்து உள்ளார்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வீடுகள், வணிக நிறுவனங்கள் என 15 இடங்களில், வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது,.கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 13 நிதிநிறுவனங்கள், 9 பின்னலாடை நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.