சென்னை,
முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் இரு அணிகளாக செயல்பட்ட அ.தி.மு.க. மீண்டும் இணைந்தது. அக்கட்சியின் துணை முதல் அமைச்சரானார் ஓ. பன்னீர்செல்வம். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட டி.டி.வி. தினகரன் கடந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். கட்சியில் ஸ்லீப்பர் செல்கள் உள்ளனர் என்றும் அரசு கவிழும் என்றும் தொடர்ந்து அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிராக பேசினார்.
அவருக்கு ஆதரவாக செயல்பட்டு வருபவர்களை கட்சியில் இருந்து நீக்கும் முடிவை அ.தி.மு.க. எடுத்து வருகிறது.
இந்த நிலையில், அக்கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ் உள்ளிட்டோர் நீக்கப்பட்டு உள்ளனர். மதுரையை சேர்ந்த டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் 80 பேர் நீக்கப்பட்டு உள்ளனர். இதேபோன்று கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டவர்கள் என விருதுநகரில் 25 பேர் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டனர் என அவர்களை கட்சியில் இருந்து நீக்கி முதல் அமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் நடவடிக்கை எடுத்துள்ளனர்.