சென்னை,
சென்னை பெருங்குடி கந்தன்சாவடியில் தனியார் ஆஸ்பத்திரி கட்டுமான பணிக்காக கட்டப்பட்டிருந்த சாரம் சரிந்து விழுந்து 2 பேர் பலியாகினர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விபத்துக்கு காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் என்.கிருபாகரன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு டிராபிக் ராமசாமி முறையிட்டார்.
இதற்கு நீதிபதிகள் மனு தாக்கல் செய்யும்படி கூறியதையடுத்து, சென்னை ஐகோர்ட் டில் டிராபிக் ராமசாமி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது.
கந்தன்சாவடி பகுதியில் 300 ஏக்கர் பரப்பளவு புறம்போக்கு நிலத்தை அதிகாரிகள் முறைகேடாக தனியாருக்கு தாரைவார்த்துள்ளனர். இதற்கு முன்னாள் எம்.எல்.ஏ.வும், பெருங்குடி பேரூராட்சி முன்னாள் தலைவருமான கே.பி.கந்தன் தான் முக்கிய காரணம். இவர் பேரூராட்சி தலைவராக இருந்தபோது பல கட்டுமானங்களுக்கு முறைகேடாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் உள்ள 99 சதவீத கட்டிடங்களுக்கு முறையான அங்கீகாரம் பெறவில்லை. தற்போது கந்தன்சாவடி எம்.ஜி.ஆர். சாலை பகுதியில் தனியார் ஆஸ்பத்திரிக்காக கட்டப்பட்டுவரும் அடுக்குமாடி கட்டிடம் உள்ள நிலமும் ஆரம்பத்தில் அரசு புறம்போக்கு நிலமாக இருந்துள்ளது. முறைகேடாக இந்த நிலம் தனியாருக்கு விற்கப்பட்டுள்ளது.
20 அடி அகலம் மட்டுமே கொண்டுள்ள சாலையில் 10-க்கும் மேற்பட்ட அடுக்குமாடிகள் கட்ட அதிகாரிகள் எப்படி அனுமதி வழங்கினர்? என்பது தெரியவில்லை. மவுலி வாக்கம் சம்பவம், சென்னை சில்க்ஸ் தீவிபத்து உள்ளிட்ட பல சம்பவங்கள் நடந்த பின்னரும் அதிகாரிகள் இன்னும் பாடம் கற்கவில்லை.
2006-ம் ஆண்டு கே.பி.கந்தன் பேரூராட்சி தலைவராக போட்டியிடும்போது சில லட்சத்தில் இருந்த அவரது சொத்து மதிப்பு, 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது பல கோடியை தாண்டிவிட்டது. கந்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் செல்வ வரியை முறையாக செலுத்தவில்லை. பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியை ஒட்டியுள்ள பெருங்குடி மற்றும் கந்தன்சாவடி பகுதிகள் அடுக்குமாடி கட்டிடங்கள் கட்ட தகுதியற்றவை.
எனவே அரசுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை மீட்க சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அதுபோல கே.பி.கந்தனின் சொத்து மதிப்பு குறித்து வருமான வரித்துறை சோதனைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.