தமிழக செய்திகள்

போராடிய தூத்துக்குடி மாவட்ட மக்களை கொச்சைப்படுத்தாதீர்கள் தி.மு.க. எம்.எல்.ஏ. கீதாஜீவன் பதில்

என் மீது பழி போடுவதாக நினைத்து போராடிய தூத்துக்குடி மாவட்ட மக்களை கொச்சைப்படுத்தாதீர்கள் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, தி.மு.க. எம்.எல்.ஏ. கீதாஜீவன் பதில் அளித்துள்ளார்.

சென்னை,

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

30.3.2018 அன்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தூத்துக்குடி பகுதி மக்களின் எண்ணத்திற்கேற்ப, ஸ்டெர்லைட் ஆலையினை நிரந்தரமாக மூட வேண்டும் என தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க, நீதிமன்ற அனுமதியுடன், 4.4.2018 அன்று தி.மு.க.வின் சார்பில் தூத்துக்குடியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற தூத்துக்குடி பகுதி கிராம மக்களை தொடர் போராட்டத்தின் 100-வது நாளை மிகவும் எழுச்சியுடன் மத்திய, மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று போராட்டக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், 20.5.2018 அன்று சார்-ஆட்சியர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர் முன்னிலையில் போராட்டக் குழுவினருடன் நடத்திய அமைதி பேச்சுவார்த்தையில், போராட்டக்குழுவினர் முற்றுகை போராட்டத்தினை நடத்திட அனுமதி கேட்டு கோரிக்கை வைத்தனர். ஆனால், அதற்கு அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

தி.மு.க. சார்பில் 22.5.2018 அன்று நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 500-க்கும் மேற்பட்டோர் அறவழியில் பேரணியாக சென்றபோது, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். அப்படி இருக்கையில் தி.மு.க. மீது முதல்-அமைச்சர் பழி சுமத்துவது அவர் வகிக்கும் பதவிக்கு தரம் தாழ்ந்த குற்றச்சாட்டு. அடிப்படை ஆதாரம் ஏதும் இல்லாதது.

தூத்துக்குடி மாநகரம் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் முன்னெடுத்த முற்றுகைப் போராட்டத்தில், சாதி, மத, இன, கட்சி வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து, பெருந்திரளாக கலந்து கொண்டனர் என்பதுதான் உண்மை. அது ஒரு தன்னெழுச்சியான மக்களின் போராட்டமே தவிர தி.மு.க. உள்பட எந்த அரசியல் கட்சியும் தூண்டிவிட்டு நடத்திய போராட்டம் அல்ல.

உண்மைநிலை இவ்வாறிருக்க, சட்டசபையில் முதல்-அமைச்சர் தூத்துக்குடி கலவரத்திற்கு காரணம் கீதாஜீவன், எம்.எல்.ஏ., என்று கூறுவது வடிகட்டிய பொய் மட்டுமல்ல தி.மு.க. மீது அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் சுமத்தும் வாடிக்கையான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் தொகுப்பாகவே உள்ளது.

தி.மு.க. மீது பழி சுமத்தும் போக்கில் துயரத்தில் மூழ்கி தினம் தினம் செத்துக்கொண்டிருக்கும் தூத்துக்குடி மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தும் முயற்சியில் முதல்-அமைச்சரே இறங்கியிருப்பது வேதனைக்குரியது. துப்பாக்கிச் சூட்டில் காயம்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லாமலும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நேரில் அனுதாபம் தெரிவிக்க முடியாமலும் இருக்கும் முதல்-அமைச்சர் என் மீது குற்றம் சாட்டுவது தனது தோல்வியை என் மீது போட்டு தப்பிக்க முயற்சியாகவே நான் பார்க்கிறேன்.

காவல்துறை, உளவுத்துறை கையில் வைத்திருக்கும் முதல்-அமைச்சர் நடந்த நிகழ்வுகள் முழுவதும் தெரிந்து கொள்ளவில்லை என்று நினைப்பதா, அல்லது தெரிந்து கொள்ளும் அளவிற்கு மாநில உளவுத்துறை முதல்-அமைச்சருக்கு தகவல்களை கொடுப்பதில்லையா என்ற கேள்வி எனக்குள் எழுகிறது.

ஆகவே முதல்-அமைச்சரின் பொய்க்குற்றச்சாட்டு பற்றி குறிப்பிட விரும்புவது ஒன்றே ஒன்றுதான். அரசியலில் இருக்கும் என் மீது பழி போடுங்கள். அதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் என் மீது பழி போடுவதாக நினைத்து உணர்வுடனும், தன்மானத்துடனும், தன்னெழுச்சியாக போராடிய என் மாவட்ட மக்களை தயவு செய்து கொச்சைப்படுத்தாதீர்கள் என்பதை மட்டும் முதல்-அமைச்சருக்கு வேண்டுகோளாக வைக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்