புதுச்சேரிக்கு டேங்கர் லாரியில் அனுப்பி வைக்கப்பட்ட 4 டன் பாமாயிலை திருடி தண்ணீர் கலந்து மோசடி நடந்துள்ளது. இதனால் ரூ.40 லட்சம் எண்ணெய் வீணானது.
சமையல் எண்ணெய்
வில்லியனூர் மணவெளியில் தனியார் ஆயில் மில் உள்ளது. இந்த ஆயில் மில் சென்னை முகப்பேரில் ஏஜெண்டாக செயல்பட்டு வரும் நிறுவனத்திடம் எண்ணெய் வேண்டும் என்று ஆர்டர் கொடுத்தது. அதன்பேரில் அந்த நிறுவனம், ஐதராபாத்தில் உள்ள பாமாயில் தொழிற்சாலையில் ரூ.40 லட்சம் 32 ஆயிரத்துக்கு 29.96 மெட்ரிக் டன் சமையல் எண்ணெயை கொள்முதல் செய்து சென்னையில் உள்ள லாரி டிரான்ஸ்போட்டுக்கு சொந்தமான டேங்கர் லாரி மூலம் கடந்த மாதம் 24-ந் தேதி புதுச்சேரிக்கு அனுப்பி வைத்தது.
லாரியை டிரைவர் கருப்பசாமி ஓட்டி வந்தார். கிளீனராக பாலசுப்பிரமணியன் இருந்தார். கடந்த மாதம் 27-ந் தேதி புதுச்சேரிக்கு லாரி வந்து சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் குறிப்பிட்ட நாளில் லாரி வரவில்லை.
தண்ணீர் கலந்து மோசடி
இதுகுறித்து புதுச்சேரியியை சேர்ந்த ஆயில் மில் நிர்வாகம் சென்னையில் உள்ள நிர்வாகத்திடம் தெரிவித்தது. இதுபற்றி லாரி டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் விசாரித்தபோது, சென்னை மாதவரம் பகுதியில் டேங்கர் லாரி கேட்பாரற்று நிற்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மாற்று டிரைவர் மூலம் லாரி புதுச்சேரி ஆயில் மில்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அங்கு லாரியில் உள்ள எண்ணெயை சோதனை செய்தபோது, தண்ணீர் கலந்து இருப்பதும், 4 டன் எண்ணெய் திருடப்பட்டு, அதற்கு பதிலாக தண்ணீரை கலந்து திருட்டை மறைக்க மோசடி செய்ததும் தெரியவந்தது. இதனால் ரூ.40 லட்சம் மதிப்பிலான எண்ணெய் பயன்படுத்த முடியாமல் வீணானது.
போலீசார் விசாரணை
இந்த மோசடி குறித்து சென்னை நிறுவனத்தை சேர்ந்த இயக்குனர் கேசவய்யா வில்லியனூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் டிரைவர் கருப்பசாமி, கிளீனர் பாலசுப்ரமணியன் மற்றும் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.