தமிழக செய்திகள்

மூதாட்டியிடம் வங்கி தகவல்களை பெற்று ரூ.3¾ லட்சம் நூதன மோசடி

தனியார் நிறுவனத்தில் பகுதிநேர வேலை பெற்று தருவதாக கூறி மூதாட்டியிடம் மர்ம நபர் வங்கி தகவல்களை பெற்று ரூ.3 லட்சம் நூதன மாசடி செய்து விட்டார்.

பகுதிநேர வேலை

திருச்சி நம்பர்-1 டோல்கேட் குறிஞ்சிநகரை சேர்ந்தவர் அன்பழகன். இவருடைய மனைவி விஜயராணி (வயது 63). இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் 25-ந் தேதி இவருடைய செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தது.

அதில், "தனியார் நிறுவனத்தில் பகுதி நேர வேலை இருப்பதாகவும், வேலையில் சேர விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்" என்றும் கூறப்பட்டு இருந்தது. அந்த வேலையில் சேரலாம் என விஜயராணி நினைத்தார். இதனால் குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட அந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார்.

மோசடி

அப்போது எதிர்முனையில் பேசிய மர்மநபர், விஜயராணியிடம் வேலை பெறுவதற்கு வங்கி ஏ.டி.எம். உள்ளிட்ட விவரங்களை வழங்கும்படி கேட்டார். இதை நம்பி விஜயராணியும் அனைத்து தகவல்களையும் அந்த நபருக்கு அனுப்பினார். பின்னர் விஜயராணியின் செல்போனுக்கு வந்த ஓ.டி.பி. எண்ணை பெற்று அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.3 லட்சத்து 78 ஆயிரத்து 848-ஐ எடுத்து மோசடி செய்து விட்டார்.

இதுபற்றி அறிந்த விஜயராணி அதிர்ச்சி அடைந்து திருச்சி மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

------