தமிழக அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் ஆகியவை இணைந்து நடத்தும் "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று தொடங்கியது. இந்த பயிற்சி வகுப்பினை கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், இந்த இலவச பயிற்சி வகுப்பு 100 நாட்கள் நடக்கும். வார நாட்களில் திங்கள் முதல் சனி வரையிலும், பயிற்சி வகுப்புகள் 300 மணி நேரம்-முற்பகல் தினமும் 3 மணி நேரமும், வழிகாட்டுதல் வகுப்புகள் 300 மணி நேரம்-முற்பகல் தினமும் 3 மணி நேரமும், பயிற்சி தேர்வுகள் 120-பிரதி சனிக்கிழமை தோறும் வழங்கப்படவுள்ளது. பயிற்சி காலத்தில் பாடநூல்கள் மற்றும் கையேடுகள் வழங்கப்படும். இப்பயிற்சியில் உள்ள இளைஞர்கள் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வேலை வாய்ப்பற்ற படித்த இளைஞர்களும் இதுபோன்ற பயிற்சி வகுப்பினை முறையாக பயன்படுத்தி தேர்வில் வெற்றி பெற்று அரசு பணிக்கு செல்ல வேண்டும், என்றார். இதில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் (பொறுப்பு) கலைசெல்வன், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.