அரசு பள்ளிகளில் பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு உயர்கல்வி நுழைவு தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பை முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தொடங்கி வைத்தார்.
இலவச பயிற்சி வகுப்புகள்
அரசு பள்ளிகளில் பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவ- மாணவிகள்
உயர் படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு நுழைவு தேர்வுகளை எதிர் கொள்ள வசதியாக இலவச பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி உயர்கல்வி சேர்க்கைக்கான நுழைவு தேர்வுகளில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் கணிசமான எண்ணிக்கையில் தேர்ச்சி பெற உதவும் வகையில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டத்தில் பள்ளிகள் அளவில் 13 பயிற்சி மையங்களை தேர்வு செய்து பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நுழைவு தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தொடங்கி வைத்தார்.
பயன்படுத்தி கொள்ள வேண்டும்
அப்போது அவர் பேசுகையில், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு உயர் படிப்புகளில் சேர்வதற்கான நுழைவு தேர்வுகளை அரசு பள்ளி மாணவ, மாணவிகள் எளிதாக எதிர்கொள்ளும் வகையில் இந்த பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதில் மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் மூலம் பல்வேறு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இந்த பயிற்சி வகுப்பை மாணவ, மாணவிகள் நன்றாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் ஜெயப்பிரகாசம், கேசவகுமார், தலைமை ஆசிரியை தெரசாள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்திவேல், பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் சுபத்ரா, உதவி தலைமை ஆசிரியை ஜோதிலதா மற்றும் அனைத்து முதுகலை ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.