தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அர்த்தமற்ற அறிக்கை
பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி-சேலை வழங்காவிட்டால் போராட்டம் என்று எடப்பாடி பழனிசாமி ஓர் அர்த்தமற்ற அறிக்கையை வெளியிட்டுள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 19-11-2022 அன்று சென்னை தலைமைச்செயலகத்தில், பொங்கல் திருநாளையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி, சேலைகளின் தரத்தினையும், சேலைகளின் வண்ணங்களையும் ஆய்வு செய்து, பணிகளை விரைவில் முடிக்க உத்தரவிட்டார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரான நான் உள்பட பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை முதன்மைச்செயலாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். பொதுமக்களுக்கு பொங்கலுக்கு வேட்டி, சேலைகள் வழங்குவதற்கான பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டும் வழங்கப்படும்
இந்த ஆய்வுக்கூட்டம் குறித்த செய்திகள் அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகங்களில் வெளிவந்தது. இதைக்கூட பார்க்காமல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பொங்கலுக்கு இலவச வேட்டி-சேலைகள் வழங்கவில்லை என்றால் போராட்டம் நடத்துவோம் என்று ஒரு வெற்று அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
1 கோடியே 79 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் முழுமையாக பொங்கல் திருநாளுக்கு இலவச வேட்டி-சேலைகள் வழங்கப்படும் என்பதை அவருக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
ரூ.487.92 கோடி நிதி ஒதுக்கீடு
2023-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான வேட்டி-சேலை வழங்கும் திட்டத்தினைத் தொடர்ந்து செயல்படுத்த கொள்கை அளவிலான ஆணைகள் வழங்கியும் மற்றும் ஏற்கனவே அதற்காக ரூ.487.92 கோடி ஒதுக்கீடு செய்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
இத்திட்டத்திற்கு தேவையான வேட்டி-சேலைகள் நிர்ணயிக்கப்பட்ட அளவீடுகளுடன் தரமான நூல்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்படுகிறது என்பதோடு, திட்டத்தினை உரிய காலத்தில் நிறைவு செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது என்பதை எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.